வடமாகாணத்தில் ஆசிரியர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளமை கவலையளிக்கின்றது.
அண்மைக்காலமாக வடமாகாணத்தில் ஆசிரியர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளமை கவலையளிக்கின்றது. இங்கு சட்டத்தின் ஆட்சி குறித்த சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. என இலங்கை ஆசிாியா் சங்கம் கூறியுள்ளது.
கொக்குவில் இந்துக்கல்லுாா் ஆசிாியா் தாக்கப்பட்டமை குறித்து சங்கம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடா்பாக சங்கத்தின் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
நேற்றைய தினமும் மாலை யாழ்.கொக்குவில் இந்து கல்லூரியின் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர்.
யாழ்.குடாநாட்டில் தலைதூக்கியிருக்கும் சமூகவிரோத செயற்பாடுகளை பொலிஸாரால் தற்போதுவரை கட்டுப்படுத்த முடியவில்லையெனும்போது இதன் பின்னணி குறித்த பாரிய சந்தேகம் மக்கள் மத்தியில் இருப்பது தவிர்க்கமுடியாததாகும்.
சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். யாழ்.குடாநாட்டை திட்டமிட்டு சீர்குலைக்கும் செயற்பாட்டில் பல சக்திகள் திரைமறைவாக முனைப்பு காட்டிவரும் நிலையில்
பாதுகாக்கும் தரப்புக்களும் உடந்தையென மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன.
சமூகத்தில் பொறுப்புவாய்ந்த தலைமுறைகளை உருவாக்க முயலும் பாடசாலை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத மாணவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் போது பாடசாலை நிர்வாகத்துக்கென வரையறை விதிக்கப்படுகிறது.
பெற்றோர்கள் சிலரின் தம் பிள்ளைகள் தொடர்பான கட்டுப்பாடற்ற வளர்ப்பு முறையே தவறான கூட்டுக்களுடனான நெறிபுறள்வான நடத்தைகளுக்கு அவர்களை கொண்டுசென்றுவிடுகிறது.
இதனால் முழு சமூகமும் அச்சுறுத்தப்படுகிறது. பொறுப்புவாய்ந்த இளந்தலைமுறைகள் உள்ள எம் சமூகத்தில் - சிலரின் நெறிமுறையற்ற செயற்பாட்டால் அச்சுறுத்தலுக்குள்ளாகும்
வடமாகாண கட்டமைப்பை பாதுகாக்க சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இதயசுத்தியுடன் செயற்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தினராக கேட்டுக்கொள்கின்றோம்.