51 வயதான கொரிய கப்பல் ஊழியருக்கு திருமண ஆசைகாட்டி 85 லட்சத்தை கறந்த கிளிநொச்சியை சேர்ந்த 25 வயது பெண்! தொலைபேசி இலக்கத்தை மாற்றிவிட்டு தலைமறைவான நிலையில் கைது...
51 வயதான கொரிய கப்பல் ஊழியர் ஒருவருக்கு திருமண ஆசையை காட்டி சுமார் 85 லட்சம் ரூபாய் பணத்தை கறந்த பெண் கிளிநொச்சியை சேர்ந்த 25 வயதான பெண் கொழும்பு மோசடி தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பம்பலப்பிட்டி பிரதேசத்தில் யுவதி அறிமுகமானதாகவும் அறிமுகமான தினத்தில் இருந்து இருவரும் நட்பாக பழகி வந்தாகவும் மோசடிக்கு உள்ளான நபர் கூறியுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி கப்பல் சேவைக்காக புறப்பட்டு சென்றது முதல் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி வரை, யுவதியின் கோரிக்கைக்கு அமைய அவரது தேவைக்காக அவ்வப்போது 85 லட்சம் ரூபா பணத்தை அனுப்பியதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி இலங்கை திரும்பிய நிலையில், பம்பலப்பிட்டியில் யுவதி தங்கியிருந்த இடத்திற்கு குறித்த நபர் சென்றுள்ளார். எனினும் ஒரு மாதத்திற்கு முன்னர் யுவதி தனது சொந்த ஊரான கிளிநொச்சிக்கு சென்று விட்டதாக தெரியவந்துள்ளது.
யுவதியின் அலைபேசிக்கு அழைப்பை எடுத்த போதிலும் அது செயற்படவில்லை என்பதால், கப்பலில் பணிப்புரியும் நபர், யுவதியை தேடி கிளிநொச்சிக்கு சென்றுள்ளார். எனினும யுவதியை கண்டுபிடிக்க முடியவில்லை.
பல எதிர்பார்ப்புகளுடன் திருமணம் செய்துக்கொள்வதற்காக யுவதிக்கு பணத்தை வழங்கியதாகவும் யுவதி தன்னை ஏமாற்றியுள்ளதால், பணத்தை திரும்ப பெற்றுத்தருமாறும் கோரி அந்த நபர், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டுக்கு அமைய யுவதியின் அலைபேசி விபரங்கள் மற்றும் வங்கிக்கணக்கு விபரங்கள் ஆகியவற்றின் ஊடாக விசாரணைகளை நடத்திய பொலிஸார், யுவதி வசிக்கும் முகவரியை கண்டுபிடித்து தகவல் அனுப்பி அவரை கொழும்புக்கு வரவழைத்துள்ளனர்.
கொழும்பு வரவழைத்த யுவதியிடம் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் பணம் பெற்றுக்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். தனக்கும், பணம் வழங்கிய நபருக்கும் இடையில் நிலைப்பாடுகளில் பொருத்தம் இல்லை என்பதால்
அவரை திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தை கைவிட்டதாகவும் யுவதி பொலிஸாரிடம் கூறியுள்ளார். யுவதியிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், பொலிஸார் யுவதியை கைது செய்துள்ளனர்.
யுவதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.