யாழ்.சாவகச்சோி - கல்வயலில் கத்தியை காட்டி மிரட்டி பெண்ணின் சங்கிலியை அறுக்க முயற்சி! சமயோசித புத்தியால் சங்கிலியை காப்பாற்றிய பெண்..
யாழ்.சாவகச்சோி - கல்வயல் பகுதியில் பாடசாலையிலிருந்து மகனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் கத்தியை காட்டி அச்சுறுத்தி கொள்ளையிட முயற்சிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சமயோசித புத்தியால் சங்கிலி தப்பியுள்ளது.
நேற்று மதியம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பாடசாலையில் இருந்து மகனை அழைத்துக் கொண்டு சைக்கிளில் வீடு சென்று கொண்டிருந்த பெண்ணை கல்வயல் புலுட்டையன் கோவில் சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வழிப்பறி கொள்ளையன் கீழே இறங்கி கத்தியைக் காட்டி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை கழற்றுமாறு கேட்டுள்ளான். இந்த சந்தர்ப்பத்தில் சைக்கிளில் இருந்த மகன் அழுகுரல் கேட்டு எதிர் வீட்டுப் பெண் கேற்றினூடாக எட்டிப் பார்த்துள்ளார்.
இதன்போது திருடன் கத்தியைக் கொண்டு அப் பெண்ணை உள்ளே செல்லுமாறு துரத்தியுள்ளான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த பெண் தனது சங்கிலியை புல்லுக்குள் எறிந்துள்ளார். உடனே சங்கிலியை எடுக்க முடியாமையினால்
கொள்ளையர்கள் தப்பித்துள்ளனர். கத்தியுடன் தப்பித்து செல்லும் திருடர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் அருகில் உள்ள சீ.சி.ரீ.வி கமராக்களில் பதிவாகி இருந்தது. இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஏற்கனவே நெல்லியடிப் பகுதியில் திருடப்பட்டது என அறிய முடிகிறது.
மோட்டார் சைக்கிள் திருட்டு தொடர்பில் அந்தப் பிரதேச பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் திருடர்கள் இதுவரை பிடிபடவில்லை. இந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி அவர்கள் மேலும் திருட்டுக்களில் ஈடுபட முடியும்.
எனவே இது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். NP BGX 7266