போதைப் பொருட்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு வழங்க விசேட திட்டம்!
வடமாகாணத்தில் போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களில் கைதானவர்களுக்கு மறுவாழ்வு வழங்கும் திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.
இன்று யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புபட்ட கைதிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
சுமார் 30க்கும் மேற்பட்ட போதைப்பொருள் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தண்டணைக் காலம் நிறைவடைந்த பின்னர் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்வது தொடர்பில் நாம் சில வேலை திட்டங்களை உருவாக்க எண்ணியுள்ளோம்.
சிறையில் அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில் சிறையில் இருந்து வெளியேறிய பின் அவர்களின் ஏனைய தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.