நொச்சிமோட்டை கோர விபத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 23, 2 பேருக்கு அனுராதபுரத்தில் மேலதிக சிகிச்சை! 3 விபத்துக்கள் குறித்து பொலிஸார் விசாரணை...
வவுனியா - நொச்சிமோட்டை பாலத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் காயமடைந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதுடன், 2 பேர் மேலதிக சிசிக்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்க மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து நேற்றுமுன்தினம் (நவ. 05) அதிகாலை வவுனியா, நொச்சிமோட்டைப் பாலத்தில் மோதி தடப்புரண்டு விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் உடனடியாக 16 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதன் பின்னரும் விபத்துக்குள்ளான பஸ் பயணித்து சிறிய காயங்களுக்குள்ளான மற்றும் உடல் நிலை பாதிப்படைந்த மேலும் 7 பேர் வவுனியா வைத்தியசாலையில் மதியம் வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் காயமடைந்தோர் தொகை 23 ஆக அதிகரித்துன்ளது.
அதில் இருவர் மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை,
அதிகாலை நொச்சிமோட்டைப் பகுதியில் அதிசொகுசு பேரூந்து ஒன்று பாலத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானபோது அதன் பின் யாழில் இருந்து வந்த அதிசொகுசு பஸ் குறித்த பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்கும் நோக்காக சாரதி செயற்பட்டமையால் பாலத்தின் மறுபக்கம் பாதையை விட்டு விலகி கால்வாய்க்குள் சென்றுள்ளது.
வவுனியா நகரப் பகுதியில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தின் முன்பாகவும் யாழில் இருந்து வந்த பிறிதொரு அதி சொகுசு பஸ் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்களானது.
குறித்த இரு விபத்துக்களிலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் மூன்று விபத்துக்கள் தொடர்பாகவும் ஓமந்தை மற்றும் வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.