யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரை வாங்கிய வைத்தியர்கள் தொடர்பில் விசாரிக்க விசேட குழு!
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் கொள்வனவு செய்த வவுனியாவை சேர்ந்த அரச மருத்துவர் ஒருவர் தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெறுவதாக வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.மகேந்திரன் தொிவத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்கள் மீது உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு பரிசோதகர்கள் மேற்கொண்டிருந்த ஆய்வுகளின்போது வவுனியாவை சேர்ந்த அரச மருத்துவர் ஒருவர் தனது தனியார் மருத்துவமனையின் பெயரில் போதைமாத்திரைகள் கொள்வனவு செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மாகாண சுகாதார சேவைகள் பணிமனையும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இவற்றினடிப்படையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவர் மற்றும் அவருடைய தனியார் மருத்துவமனையிடமிருந்து
மாத்திரைகள் யாருக்கெல்லாம் விநியோகிக்கப்பட்டது? என்பது தொடர்பான ஆரம்ப விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த போதை மாத்திரைகள் கொள்வனவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளமையால் யாழ்ப்பாணம் - வவுனியா மாவட்டங்களை உள்ளடங்கிய விசாரணைக்கு தனியான குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எனவே விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சம்மந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.