ரகசியமாக சந்தித்துக்கொண்ட போரிஸ் ஜான்சன் - ரிஷி சுனக்: என்ன பேசிக்கொண்டார்கள்?
பிரித்தானியாவில் மீண்டும் ஒருமுறை பிரதமர் தேர்வுக்கான நடவடிக்கைகள் பரபரப்பாகத் துவங்கியுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேசியுள்ளார்கள். சனிக்கிழமை இரவு 8.00 மணியளவில், போரிஸ் ஜான்சனுடைய பிரச்சார தலைமையகத்துக்குச் சென்றுள்ளார் ரிஷி சுனக்.
இருட்டு நேரத்தில் அவர்கள் இருவரும் தனிமையில் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதை அறிய மக்கள் ஆவலாக இருக்கும் நிலையில், இரு தரப்பினரும், அவர்கள் பேசிக்கொண்ட விடயம் வெளியே வரக்கூடாது என்பதை உறுதி செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும், இருவரின் சந்திப்பு நட்பு ரீதியான ஒன்று என்று கூறியுள்ள கன்சர்வேட்டிவ் கட்சியைச் சார்ந்த ஒருவர், உண்மை என்னவென்றால், போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமர் போட்டியில் இறங்குவாரென்றால், அது கட்சிக்கு பேரழிவை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என்பதை மட்டும் ரிஷி தெளிவுபடுத்தியதாக தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்துதான் போரிஸ் ஜான்சன் பிரதமர் போட்டியில் பங்கேற்பதிலிருந்து பின்வாங்கியுள்ளார் என கருதப்படுகிறது.