SuperTopAds

யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களில் சுகாதாரத்துறை திடீர் பாய்ச்சல்! போதை மருந்து விநியோகிக்கும் இரு வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டனர்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களில் சுகாதாரத்துறை திடீர் பாய்ச்சல்! போதை மருந்து விநியோகிக்கும் இரு வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டனர்..

யாழ்.குடாநாட்டில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் மருந்தகங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதன்போது போதை மாத்திரைகளை இரு மருத்துவர்கள் கொள்வனவு செய்துள்ளமை தொியவந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் அதிகளவான போதை மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளார். 

அவருடைய மருந்தகம் சுகாதார மருத்துவ அதிகாரியால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது அதிகளவான போதை மாத்திரைகள் மீட்க்கப்பட்டிருக்கின்றது. 

எனினும் மேற்படி தனியார் வைத்தியசாலை மருந்தகத்திலிருந்து யாருக்கெல்லாம் அது விநியோகம் செய்யப்பட்டது அல்லது மருத்துவ தேவைக்காக யாருக்கேனும் வழங்கப்பட்டதா? என்பனபோன்ற தகவல்கள் பதிவேட்டில் இல்லை. 

மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல மொத்த மருந்து விற்பனை நிலையத்திலிருந்து வவுனியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் மாதாந்தம் 400 பெட்டி போதை மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளார். 

அவர் வவுனியாவில் உள்ள அரச மருத்துவமனை ஒன்றில் பணியாற்றுகின்றார். இவ்வளவு பெருந்தொகை போதை மாத்திரைகள் மருத்துவ பயன்பாட்டிற்காக தேவைப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

இதேவேளை இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.