புதிய பிரதமரை நியமிக்கவிருக்கும் மன்னர் சார்லஸ்!
நாட்டின் புதிய பிரதமரை நியமிக்கும் முக்கியமான அரசியலமைப்பு கடமையை இரண்டாவது முறையாக மன்னர் சார்லஸ் நிறைவேற்ற இருக்கிறார். பிரித்தானிய பிரதமராக வெறும் 44 நாட்கள் மட்டுமே பொறுப்பில் இருந்த லிஸ் ட்ரஸ், அரசியல் காரணங்களால் பதவியை துறந்துள்ளார். இதனையடுத்து, இன்னும் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் யார் என்பதை மன்னர் சார்லஸ் அறிவிக்க இருக்கிறார்.
புதிய பிரதமராக கட்சி எவரை தெரிவு செய்கிறதோ, அவர் நேரடியாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று மன்னரை சந்திக்க வேண்டும். அங்கே அரசமைக்க கோரப்படுவார்கள். நாட்டின் தலைவர் என்பதால், தற்போது சார்லஸ் மன்னரே புதிய பிரதமரை நியமிக்க வேண்டும்.
இது வெறும் ஒரு சடங்கு என்றாலும், மரபுகள் மீறப்படாமல் பாதுகாக்கப்பட்டுவருகிறது. மேலும், நாட்டின் புதிய பிரதமரை நியமிக்கும் பொருட்டு, சார்லஸ் மன்னர் சட்ட ஆலோசனைகள் அல்லது சிறப்பு அதிகாரிகளுடன் விவதாம் என எதுவும் முன்னெடுக்க தேவையில்லை.
ஆட்சிக்கு தேவையான உறுப்பினர் எண்ணிக்கையுடன் அரண்மனையை நாடும் கட்சி தலைவருக்கு, அரண்மனை ஆதரவளிக்கும் என்பதே மரபு. ஆனால், அமையவிருக்கும் புதிய அரசாங்கம் தொடர்பில், வெளியேறும் பிரதமருடன் மன்னர் கலந்தாலோசிப்பார் என கூறப்படுகிறது.
இதனையடுத்து, புதிய பிரதமர் மன்னரை சந்தித்து, ஆட்சியமைக்க உரிமை கோருவார். மன்னரும் ஆதரவளிப்பார். இதனையடுத்து சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும், நாட்டின் புதிய பிரதமராக குறிப்பிட்ட நபரை மன்னர் நியமித்துள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
மறைந்த ராணியார் இரண்டாம் எலிசபெத், தமது ஆட்சி காலத்தில் பிரித்தானியாவில் 15 பிரதமர்களை மரபுகளின் அடிப்படையில் நியமித்தார். ராணியார் இரண்டாம் எலிசபெத் நியமித்த கடைசி பிரதமர் லிஸ் ட்ரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.