உண்மையைக் கூறுவதை விடுத்து பணத்தை வழங்குவது எவ்வகையில் நியாயம்?
தமது உறவினர்களை இராணுவத்தினரிடம் கையளித்தமைக்கான கண்கண்ட சாட்சிகள் இருக்கும்போது அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கூறுவதை விடுத்து, பணத்தை வழங்குவது எவ்வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், இலங்கையைப்போன்று மனித உயிருக்கு சற்றும் மதிப்பளிக்காத வேறு நாடுகள் எவையும் இருக்காது என்றும் விசனம் வெளியிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானம் குறித்தும், அரசாங்கத்தின் துலங்கல் குறித்தும் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எம்மால் திருப்தியடைய முடியாது என்பதுடன் அதனால் எமக்கு எவ்வித பயனும் கிட்டப்போவதில்லை.
இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட 'அரகலய' போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு வழங்கப்படவில்லை. வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த தமிழ்மக்களும் இத்தகைய அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்தார்கள் என்ற விடயத்தை மனித உரிமைகள் பேரவையினால் ஏன் கூறமுடியவில்லை? எனவே தற்போது நாம் இலங்கை அரசாங்கத்தை விடவும் பன்னாட்டு சமூகத்தால் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்றே எண்ணத்தோன்றுகிறது.
அதேபோன்று காணாமல்போன நபரொருவரின் நெருங்கிய உறவினருக்கு வழங்கப்படும் 100,000 ரூபா இழப்பீட்டுத்தொகையை 200,000 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. தமது உறவினர்களை இராணுவத்தினரிடம் கையளித்தமைக்கான கண்கண்ட சாட்சிகள் இருக்கும்போது அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைக் கூறுவதைவிடுத்து, பணத்தை வழங்குவது எவ்வகையில் நியாயமாகும்?
இலங்கையைப்போன்று மனித உயிருக்கு சற்றும் மதிப்பளிக்காத வேறு நாடுகள் எவையும் இருக்காது என்று தெரிவித்தார்.