அன்றாட சீவியத்தை பறிக்காதீர்கள் என கேட்டு 14 நாட்களாக போராட்டம் நடத்தும் மக்கள்! கண்டு கொள்ளாத கடற்றொழில் அமைச்சு..
பூநகரி - கிராஞ்சி இலவன்குடா பகுதியில் கடந்த 14 நாட்களாக தங்கள் வாழ்வாதாரத்திற்காக கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் கடற்றொழில் அமைச்சு கண்டுகொள்ளாமல் இருந்துவருகின்றது.
அப்பகுதியில் கடந்த பல நாட்களாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளாலும், புதிதாக அமைக்க முயற்சிக்கப்படும் கடலட்டை பண்ணைகளாலும் தமது பாரம்பரிய கடற்றொழில் அழியும் நிலையை அடைந்துள்ளதாக கூறி,
பிரதேச கடற்றொழிலாளர்கள் நேற்றுடன் 14 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலவன்குடா கிராஞ்சி கடற்கரையோரம் முழுவதும் சட்டவிரோதமாக கடல் அட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்
இவற்றினை பொறுப்பு வாய்ந்த அரசஅதிகாரிகள், திணைக்களங்கள் எவையும் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை. என பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.