தகவலறியும் சட்டமூலம் ஊடாக தகவல் கோருவது சட்டவிரோதமல்ல! ஆணைக்குழு சுட்டிக்காட்டு..
தகவல் அறியும் சட்டமூலத்தின் மூலம் தகவல்களை பெறுவது சட்டவிரோதம் அல்ல எனவும் அனைத்து பிரதேச செயலகங்களிலும் தகவல் வழங்கும் உத்தியோத்தர்கள் பெயர் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் இலங்கை தகவல் அறியும் ஆணைக் குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி கிஸாலி பின்ரோ தெரிவித்தார்.
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுஜன ஊடக அமைச்சும், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவும் இணைந்து "தகவல் அறியும் சட்டத்தினை கையாளுகையில் ஊடகவியலாளர்களுக்கு உள்ள சவால்கள்" தொர்பான கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மேற்கொண்டது.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தகவல் அறியும் சட்டம் மூலம் சில தகவல்களைப் பெறுவதற்கு மட்டுப்பாடுகள் மற்றும் சில ஏற்பாடுகளை பின்பற்ற வேண்டியுள்ளது. எந்த ஒரு அரச நிறுவனங்களிலும் தகவல் அறியும் சட்டமூலத்தை பாவிக்க முடியும் அதில் வரையறை கிடையாது.
ஆனால் அவர்களால் வழங்கப்படும் தகவல்களுக்கு மட்டுப் பாடுகள் சில நிறுவனங்களுக்கு காணப்படும். தகவல் கோரிக்கை விடும்போது தகவல் கோருபவரிடம் இருந்து எந்த ஒரு நிதியையும் கோரிக்கைக்கு பெற முடியாது.தகவல் உத்தியோகாத்தர் கோரிக்கையாளர்களுக்கு தகவல் வழங்கும்போது தகவல் வழங்கும் பத்திரத்திற்கேற்ப அங்கீகரிக்கப்பட்ட சட்ட விதிமுறைக்கு அமைய சிறிய தொகை ஒன்றினை அறவிட முடியும்.
மேலும் தகவல் வழங்குனரால் வழங்கப்படும் கோரிக்கைக்கு மேல் அதிகமான தகவல்களை உத்தியோகத்தர் வழங்குவது சட்டவிரோதம் அல்ல அத்தோடு பெறப்படுகின்ற தகவல்களுக்கு மேலதிகமாக குறித்த துறைசார்ந்த உத்தியோகத்தருடன் கலந்துரையாடவும் முடியும்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவரால் சில பிரதேச செயலகங்களில் தகவல் உத்தியோகத்தர் பெயர் காட்சிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஆணையாளர் சகல பிரதேச செயலகங்களிலும் ஏனைய அரச நிறுவனங்களிலும் தகவல் உத்தியோத்தர் கட்டாயம் இருக்க வேண்டும் என சட்டத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு உத்தியோத்தர் இல்லாவிட்டால் குறித்த நிறுவனத்திற்கு பொறுப்பாக உள்ள மேல் அதிகாரிகளிடம் நேரடியாக கேளுங்கள் அதற்குரிய ஒழுங்கினை அவர் செய்து தர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எமது ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு முன் வைத்தாள் அதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கருத்துத் தெரிவிக்கும்போது தகவலறியும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் மக்கள் தமக்கான தகவல்களை பெறமுடிகின்றது. இச் சட்டம் மக்களுக்கான ஒரு உரிமையாகவும் காணப்படுகிறது.
அத்தோடு தகவலறியும் சட்டம் அரச நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையோடு, ஊழலில்லாது மக்களுக்கான சிறந்த சேவையை வழங்க உதவுகின்றது எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் தகவலறியும் ஆணைக்குழுவின் தலைவரும் நீதிபதியும் திரு.உபாலி அபேரத்ன (ஓய்வு நிலை),
தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் சட்டத்தரணி கிஸாலி பின்ரோ, தகவலறியும் ஆணைக்குழுவின் ஆணையாளர் எஸ்.முகமட் நகியா, தகவலறியும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் (பதில்) திரு.எஸ்.ஆர்.டபிள்யூ.எம்..ஆர்.பி. சரத்குமார, சிரேஷ்ட சட்டத்தரணி ஜகத் லியனாராட்சி,
மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் மற்றும் வடக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.