SuperTopAds

யாழ்.மாநகரில் காலாவதியான பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 11 வர்த்தகர்களுக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் தண்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரில் காலாவதியான பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 11 வர்த்தகர்களுக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் தண்டம்!

யாழ்.மாவட்டத்தில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த மற்றும் விற்பனைக்காக வைத்திருந்த 11 கடை உரிமையாளர்களிற்கு 1 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

செப்ரெம்பர் மாதம் 20,21ம் திகதிகளில் யாழ்.மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால், மாநகரசபைக்கு உட்பட்ட பலசரக்கு கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

இதன்போது வண்ணார்பண்ணை பொதுசுகாதார பரிசோதகர் பிரிவில் 10 பலசரக்கு கடைகளில் காலாவதியான பொருட்கள் அப்பகுதி பொதுசுகாதார பரிசோதகரால் கைப்பற்றப்பட்டன

அத்துடன் நல்லூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிலும் ஓர் கடையில் திகதி காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 

மேற்படி கடை உரிமையாளர்களுக்கு எதிராக நேற்று யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 

வழக்கினை விசாரித்த நீதவான் 11 கடை உரிமையாளர்களிற்கும் மொத்தமாக 185,000/= தண்டப்பணம் அறவிட்டு தீர்ப்பளித்தார்.