வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை! ஆளுநர் ஜீவன் தியாகராஜா..
வடமாகாண பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை மறைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பான விடயங்கள் பாடசாலையின் நற்பெயர் கெட்டுவிடும் என்பதற்காகவே மறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த விடயம் ஆளுநரின் கவனத்திற்கு தெரியப்படுத்திய நிலையில் ஆளுநர் போதைப் பொருள் தடுப்பு தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் வழங்கியுள்ளார்.
போதைப் பொருட் பாவனை, துஷ்பிரயோகம், புனர்வாழ்வு தொடர்பாக ஆளுநர் துரித நடவடிக்கை மேற்கொள்வதற்காக பின்வரும் விடயங்கள் தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கு எழுத்து மூலமான அவசர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது, இதுவரை வடமாகாண சபையானது பெற்றோரையும் மற்றும் பிள்ளைகளையும் போதைப் பொருட் பாவனை மற்றும் விற்பனை போன்ற செயற்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்குத் தவறிவிட்டது என்பது ஆளுநரது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்விடயம் ஒரு கூட்டுப் பொறுப்பு மிக்கதும் ஏற்றுக் கொள்ளமுடியாததுமானதாகும். இதன்பொருட்டு ஆளுநரால் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு திங்கட் கிழமையும் மாகாணக் கல்விப்பணிப்பாளர் மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் இருப்பின் அவற்றை ஆளுநரது செயலாளருக்கு இணைப்புச் செயலாளர் ஊடாகப் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள பற்றிய விபரங்களை வழங்க வேண்டும்.
ஓவ்வொரு பிள்ளையும மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்வதோடு இரகசியத் தன்மை உறுதிப்படுத்தப்படல் வேண்டும். அவர்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளவும் வழங்கவும் அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
பாடசாலைகளில் போதைப் பொருள் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு கல்வி அமைச்சினால் வெளிப்படுத்தப்படாத பட்சத்தில் பாடசாலை அதிபர் மற்றும் வலையக் கல்விப் பணிப்பாளர் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர் கொள்ளவேண்டி ஏற்படும்.
மாகாணக் கல்விப் பணிப்பாளர் வலையக் கல்விப் பணிப்பளாருடன் இணைந்து சம்பவங்களை நிரல்படுத்தி இணைப்புச் செயலாளர் ஊடாக ஆளுநரின் செயலாளருக்குப் பிரதியுடன் ஆளுநருக்கு வழங்குவதற்கு சமர்ப்பிக்க முடியும்.
2022 ஆரம்பத்திலிருந்து இற்றவரையான காலப்பகுதியில் சிகிச்சை தேவையான பிள்ளைகள் காணப்பட்டால் அவர்களுடைய பெயர், வசிப்பிடம் முதலான விபரங்கள் 02- 10-2022 அன்றுக்கு முன்பாக அறிக்கையிடப்படல் வேண்டும்.
அவ்வாறு வெளிப்படுத்தத் தவறும் பட்சத்தில் குறித்த விடயம் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு வருமாயின் உரிய அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் வடக்கு சுகாதார அமைச்சானது சுகாதார சேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் ஊடாக ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருட்களின் வடிவங்கள் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பாக அவதானிப்புக்களைச் செலுத்தி உறுதி செய்து விபரங்களை சுகாதார அமைச்சின் செயலாளர்
மற்றும் ஆளுநரின் இணைப்புச் செயலாளர் உடன் இணைந்து பணியாற்றி ஆளுநருக்கு அட்டவணைப்படுத்த வேண்டும். இவ்வசதிகள் இலவச சேவைகள் மற்றும் கட்டணம் செலுத்தும் சேவைகளைக் கொண்டதாக அமையலாம்.
சுகாதார அமைச்சின் செயலாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இணைந்து ஒவ்வொரு வாரத்தின் திங்கட் கிழமைகளில் கவனத்திற்காகப் பெற்றுக் கொள்ளப்படும் போதைப் பொருட்கள் தொடர்பான தகவல்கள் செயற்பாடுகள் தொடர்பில் இணைப்புச் செயலாளர் ஊடாக ஆளுநரின் செயலாளருக்குப் பிரதியுடன்அறிக்கைசெய்தல் வேண்டும்.
வசதிகள் மற்றும் திட்டங்கள் இறுதியாக இலங்கைப் போதைப் பொருளில் தங்கியிருப்போருக்கானபராமரிப்பு மற்றும் புனர்வாழ்வு 2007 ஆம் ஆண்டின் 54 ம் இலக்கச் சட்டத்திற்கு அமைவாக இருத்தல் வேண்டும்.
சிறுவர் உதவிக்கான செயற்பாடுகள் இணைப்புச் செயலாளர்சமூகசேவைகள் பணிப்பாளருடன் இணைந்து ஒவ்வொரு சிறுவரதும் போதைப் பொருட் பாவனையில் உள்ளனரா, சிகிச்சை பெற்றுள்ளார்களா,
2022 மற்றும் அதற்கு அப்பால் கல்வித்தராதரம் உள்ளடங்கலான நலன்கள் பற்றிக்கண்காணித்தல் வேண்டும். இவ்விடயம் தொடர்பான கள நிலைபர அறிக்கையை ஆளுநரது செயலாளர் உரிய உத்தியோகத்தர்களை ஒன்றுகூடி
ஒவ்வொரு 5 கிழமைக்கு ஒருதடவை உரிய நடவடிக்கைக்கும் பரிசீலைனைக்குமாக அறிக்கை செய்தல் வேண்டும் என ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.