இராணுவத்தில் சேர்த்து விடுவர் என்ற அச்சம்!! -அயல் நாடுகளுக்கு ஓடும் ரஷ்ய இளைஞர்கள்-
ரஷ்யா அரசாங்கத்தினால் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்த்து விடுவர் என்ற அச்சத்தினால் அந்நாட்டு இளைஞர்கள் அயல் நாடுகளுக்கு தப்பி ஓடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த ஏழு மாதங்களாக ஆகியும் ரஷ்யா படைகள் போர் நடத்தி வருகின்றது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
ரஷ்யா கைப்பற்றிய பல பகுதிகளை மீட்டுள்ளது. இதனால், உக்ரைனை முழுமையாக கைப்பற்ற திட்டமிட்ட ரஷ்யாவின் கனவு நனவாவதில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. உக்ரைனை கைப்பற்றும் வரை போர் நீடிக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
கூடுதலாக 3 இலட்சம் ரஷ்ய இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்க இருப்பதாக சமீபத்தில் புடின் அறிவித்தார். ஆனால், 'யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம். ராணுவத்தில் பணியாற்றியோருக்கு அழைப்பு விடுக்கப்படும்' என, ரஷ்ய இராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு கூறியுள்ளார்.
இருப்பினும், ரஷ்ய ஜனாதிபதி புடினின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரஷ்ய இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி பின்லாந்து, ஜார்ஜியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு செல்கின்றனர்.
கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்காசிய எல்லையில் அமைந்துள்ள ஜார்ஜியாவுக்கு செல்ல விசாவுக்கு விண்ணப்பித்து காத்து இருக்க தேவையில்லை. அங்கே சென்று உடனடி விசா வாங்கிக் கொள்ளலாம். ரஷ்யாவில் இருந்து வீதி வழியாகவே ஜார்ஜியாவுக்கு செல்ல முடியும். இதனால் ரஷ்யா - -ஜார்ஜியா எல்லையில் வாகனங்கள் குவிந்துள்ளதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.