நவம்பர் 11ம் திகதிக்கு பின் உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரகடனம்! தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு..
நவம்பர் 11ம் திகதிக்குப் பின் உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரகடனத்தை வெளியிடவுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்தார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைக்குப் பொறுப்பான அமைச்சர் 2023 மார்ச் 20ஆம் திகதி வரை உள்ளூராட்சி சபையின் பதவிக்காலத்தை நீடிக்க செய்திருக்கின்றார்.
உள்ளூராட்சி சபை சட்டத்தின் அடிப்படையில் பார்க்கும்போது உள்ளூராட்சி சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முந்திய நாளிலிருந்து தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வருகின்றது.
தேர்தலுக்கான பிரகடனத்தை வெளியிடும் போது எந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு நடைமுறையில் இருக்கிறதோ, அந்த வாக்காளர் இடாப்பையோ பயன்படுத்த வேண்டும்.
அந்தவகையில் 2021 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பை பயன்படுத்தி செப்டம்பர் 20ஆம் திகதியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரகடனத்தை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடமுடியும். ஆனால் அவ்வாறு செய்தால் 18 வயதைக் கடந்த 350,000 புதிய வாக்காளர்கள் வாக்குரிமையை பயன்படுத்தமுடியாது.
அந்தவகையில் 2022 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் 350,000 வரையானோர் புதிய வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டு நவம்பர் மாதம் அதனை அத்தாட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
அதன்பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிரகடனப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் மார்ச் 20 க்கு முன்னதாக உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா இதன்போது தெரிவித்தார்.