தியாகி திலீபனின் நினைவேந்தலை நடாத்த பஷீர் காக்கா தலைமையில் 7 பேர் கொண்ட பொதுக்கட்டமைப்பு..

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் நினைவேந்தலை நடாத்த பஷீர் காக்கா தலைமையில் 7 பேர் கொண்ட பொதுக்கட்டமைப்பு..

தியாகி திலீபனின் நினைவேந்தலை நடாத்துவதற்கு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி பஷீர் காக்கா தலைமையில் 7 பேர் கொண்ட பொதுக்கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. 

பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்குவது தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி,மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் 

சிவில் அமைப்புக்களின் தலைவர்கள் , அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் , யாழ்ப்பாண மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், மூத்த முன்னாள் போராளிகள் , மாவீரர்களின் பெற்றோர்கள் , என பல தரப்பினரும் கலந்து கொண்டனர். 

கலந்துரையாடலில் கலந்து கொண்ட பலரும் தமது கருத்துக்களை முன் வைத்தனர். " அரசியல் கலப்பற்ற ஒரு கட்டமைப்பாக இது உருவாக வேண்டும். அரசியல்வாதிகள் தமது அரசியலுக்கு அப்பால் இக் கட்டமைப்பிற்கு ஆதரவாக செயற்பட வேண்டும்" என்பதே பலரின் கோரிக்கையாக இருந்தது. 

கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் கருத்து பகிர்வுகளை தொடர்ந்து முதல் கட்டமாக பொதுக்கட்டமைப்பினை உருவாக்குவதற்காக மாவீரர்களின் தந்தையும் மூத்த போராளியான பஷீர் காக்கா தலைமையில் மூத்த போராளிகள், 

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

குறித்த குழுவானது எதிர்வரும் நாட்களில் மதகுருமார்கள், அரசியல் கட்சி தலைவர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கங்கள், பொது அமைப்புக்கள், என அனைத்து தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டு பொதுக்கட்டமைப்பின் உருவாக்கம் , 

அதன் நோக்கம் , எதிர்காலத்தில் அதன் செயற்பாடுகள் என்பன தொடர்பில் எடுத்துக்கூறி அவர்களையும் ஒன்றிணைத்து முழுமையான பொதுக்கட்டமைப்பினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு