தியாகி திலீபனின் நினைவேந்தலில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் சந்தேகங்களை உருவாக்குகிறது! யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கண்டனம்..
தியாகி திலீபனின் 35ம் ஆண்டு நினைவேந்தலில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் பாரிய சந்தேகங்களை எழுப்புவதாக யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் சாடியிருக்கின்றது.
தியாகி திலீபனின் நினைவேந்தலில் இடம்பெற்ற முரண்பாடுகள் தொடர்பாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே குறித்த விடயம் தொிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
1987ம் ஆண்டு செம்டம்பர் மாதம் 15ம் திகதி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் அடங்கிய முக்கிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகதீபம் திலீபனின் 35ம் ஆண்டு நிறைவும் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்த முதல் நாள் இன்றாகும்.
உலகின் பல இடங்களில் நினைவேந்தல்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு கொண்டிருக்கும் இன்றைய நாளில், தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த அவ் புனித மண்ணில் அரங்கேறிய சில விரும்பத்தகாத செயல்கள் மக்களிடையே அறச்சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தியாகத்தின் எல்லையை கேள்விக்குள்ளாக்கிய தியாகி திலீபனின் நினைவேந்தல் நாளில் அரங்கேற்றப்பட்ட விரும்பத்தகாத செயல்கள் சந்தேகங்களையும் எழுப்பி சென்றுள்ளது.
தியாகி தீபம் திலீபனின் ஐந்து அம்சக் கோரிக்கைகள் எவையுமே 35 வருடங்கள் கடந்தும் நிறைவேறாது அந்தரத்தில் தொங்கியே நிற்கிறது. அவரது கனவுகளை மெய்ப்பிப்பதே தமிழ் மக்களது கடமையாகவும் உள்ளது.
தொடர்ந்து இவ்வாறான நம் இனத்தையும் தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றையும் உலக அரங்கில் கொச்சைப்படுத்தும் விதமான கீழ்த்தர விடயங்களை தவிர்த்து நம்போராட்ட வரலாற்றை அடுத்த சந்ததிக்கு கடத்தும் முக்கிய பொறுப்பில் உள்ள நாம் அதை இழிவுபடுத்த வேண்டாம் எனவும்
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து நம் தாயகத்தில் இடம்பெற கூடாது என வலியுறுத்துவதுடன், இவ் விடயத்திற்கு எமது யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது என்றுள்ளது.