டயானாவின் கார் 6.92 கோடிக்கு ஏலம்!!
பிரிட்டிஷ் இளவரசி டயானா பயன்படுத்திய கார் 6.92 கோடி ரூபாவிற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் பிரபுக்கள் பரம்பரையின் ஸ்பென்சர் குடும்பத்தை சேர்ந்த டயானா 1981 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸை திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக 1996 ஆம் ஆண்டில் சார்லஸுடன் விவாகரத்து ஏற்பட்டது. 1997 ஆகஸ்ட் 31 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏற்பட்ட கார் விபத்தில் டயானா உயிரிழந்தார்.
1985 முதல் 1988 ஆம் ஆண்டு வரை போர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ வகையை சேர்ந்த காரை அவர் பயன்படுத்தினார். 2008 ஆம் ஆண்டில் அந்த காரை தொழிலதிபர் ஒருவர் வாங்கினார். டயானாவின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை 31 ஆம் திகதி அனுசரிக்கப்பட உள்ளது.
இந்த நேரத்தில் அவர் பயன்படுத்திய போர்டு எஸ்கார்ட் ஆர்எஸ் டர்போ காரை சில்வர்ஸ்டோன் நிறுவனம் கடந்த சனிக்கிழமை ஏலம் விட்டது.
பிரிட்டனின் வார்விஷைர் நகரில் ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் காரின் ஆரம்ப விலையாக 90,000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது. உலகம் முழுவதும் இருந்தும் பலர் ஏலத்தில் பங்கேற்றனர்.
இறுதியில் பிரிட்டனை சேர்ந்த ஒருவர் 6.92 கோடி ரூபாவிற்கு ஏலம் எடுத்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரத்தை ஏல நிறுவனம் வெளியிடவில்லை.