தவறுதலாக விண்ணில் பாய்ந்த ஏவுகணை!! -விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணி நீக்கம்-
இந்தியா நாட்டின் இராஜஸ்தா மாநிலத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணை தவறுதலான விண்ணில் ஏவப்பட்டுள்ளது. குறித்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 9 ஆம் திகதி, குறித்த மாநிலத்தின் சூரத்கர் நகரில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பிரம்மோஸ் ஏவுகணைகளின் பராமரிப்பு பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டிருந்தது.
அந்த ஏவுகணை பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், மியான் கன்னு நகரில் வீழ்ந்ததால், குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் அரசு, இந்திய தூதரை அழைத்து தமது கண்டனத்தை பதிவு செய்ததுடன், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் குறித்த விசாரணையில், மூன்று அதிகாரிகள் ஏவுகணையை தவறுதலாக செலுத்தியமை தெரியவந்ததுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த 3 அதிகாரிகளும் இந்த சம்பவத்திற்கு முழுமையாக பொறுப்பேற்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் மூவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை குறிப்பிட்டுள்ளது.