யாழ்.கல்வியங்காடு மரக்கறி சந்தை வியாபாரிகள் கடைகளை மூடி போராட்டம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்வியங்காடு மரக்கறி சந்தை வியாபாரிகள் கடைகளை மூடி போராட்டம்!

யாழ்.கல்வியங்காடு மரக்கறி சந்தை வியாபாரிகள் தமது வர்த்தக நிலையங்களை மூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதுடன், கோப்பாய் பொலிஸாருக்கும், நல்லுார் பிரதேசசபையினருக்கும் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர். 

யாழ்.மாநகர சபை ஆளுகைக்கு உட்பட்ட செங்குந்தா சந்தையில் மரக்கறி வியாபாரத்தினை மேற்கொள்ளும் வியாபாரிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்தைக்கு வெளியே, சந்தை சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அது தொடர்பில் வியாபாரிகள் தெரிவிக்கையில், 

சந்தைக்கு வெளியே உள்ள பலசரக்கு கடைகளில் மரக்கறி வியாபாரம் நடைபெறுவதனால் , சந்தைக்குள் வந்து மக்கள் மரக்கறியினை கொள்வனவு செய்யாமல், வீதியோரமாக இருக்கும் பலசரக்கு கடைகளில் 

மரக்கறியினை கொள்வனவு செய்து கொண்டு செல்கின்றனர். அதனால் சந்தையின் உள்ளே மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் எம்மிடம் மக்கள் வருவதில்லை. சில கடைகளில் சுகாதாரமின்றி மரக்கறிகளை கொட்டி விற்பனை செய்து வருகின்றனர். 

அத்துடன் வீதியோர கடைகளில் மரக்கறி கொள்வனவுக்காக வருவோர் தமது வாகனங்களை வீதிகளில் நிறுத்துவதனால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. எமது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் 

சந்தைக்கு வெளியே உள்ள கடைகளில் மரக்கறி வியாபாரம் நடைபெறுவதனால் எமது சந்தை சுற்று வட்டாரத்தில் உள்ள யாழ்.மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றின் ஆளுகைக்குள் உள்ள கடைகளில் மரக்கறி வியாபாரத்தை தடை செய்ய கோரி இரு சபைகளிடமும் மகஜர் கையளித்துள்ளோம். 

அதேவேளை சுகாதாரம் அற்ற முறையில் முன்னெடுக்கப்படும் மரக்கறி வியாபாரத்தை தடுக்குமாறும் , மரக்கறி வாங்க வருவோர் வீதிகளில் வாகனங்களை நிறுத்துவதானால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகின்றன. 

எனவே வீதி ஒழுங்குகளை பேணி, போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படாதவாறு, கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸாரிடமும் மகஜர் கையளித்துள்ளோம் என சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு