SuperTopAds

என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு நானே விசாரணையை கோரி உண்மையை அம்பலப்படுத்துவேன்..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சாட்டை..

ஆசிரியர் - Editor I
என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு நானே விசாரணையை கோரி உண்மையை அம்பலப்படுத்துவேன்..! யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சாட்டை..

என் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுகாதார அமைச்சிடமிருந்து விசாரணையை கோரி அதன் ஊடாக உண்மைகளை வெளிப்படுத்துவதுடன், தீர்வுகளை பெறவுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தொிவித்திருக்கின்றார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தனது பக்க நியாயத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலைக் கிளை குற்றச்சாட்டு

எமக்கும், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கும் இடையே தனிப்பட்ட காழ்ப்புணர்வுகள் எதுவும் இல்லை எனினும் ஓரளவுக்கு நேர்மையான நீதியான நிர்வாகத்தினை உறுதிப்படுத்துவது எமது சங்கத்தினது பாரிய பொறுப்பாகும் என்பதற்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. 

நமது சங்கத்தின் முக்கிய முடிவுகள் கூட்டப்படும் நிர்வாக பொதுக்கூட்டங்களில் மூலமாகவே எடுக்கப்படுகிறது.கொரோனா உச்சகட்டத்தில் இருந்தபோது பிரதிப் பணிப்பாளர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும். அனைத்து வைத்தியசாலை ஊழியர்களினதும் கடுமையான, 

கூட்டு முயற்சியினால் நிர்வகிக்கப்பட்டது. ஏறத்தாழ அனர்த்த காலம் முடிவுறும் தறுவாயில் பிரித்தானியாவில் வெளிநாட்டுப் பயிற்சியில் இருந்த பணிப்பாளர் இடைநடுவில் நாடு திரும்பியிருந்தார்.

பணிப்பாளர் நாடு திரும்பியமைக்காக ஊடகங்களில் கொவிட் 19 இடரினை சமாளிப்பதற்காக சுகாதார அமைச்சு பணிப்பாளரை மீள அழைத்துள்ளது செய்தி வெளியானது. ஆனால்உண்மைக் காரணம் அதுவல்ல.

பணிப்பாளரின் வீசா முடிவடைந்த காரணத்தினால் அவர் பிரித்தானியாவில் தொடர்ந்து தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமையாகும்.இதனால் நாடு திரும்பிய பணிப்பாளர் அவரின் இடத்திற்கு மீளவும் விசா கிடைக்கும் வரை நியமிக்கப்பட்டிருந்தார். 

அவர் வந்திருந்த காலத்தில் கொரோனா உண்மையிலேயே முடிவடைந்து இருந்தது. கொரோனா அனர்த்த முடிவில் அரச வைத்திய அதிகார அதிகாரிகள் சங்கம், பிரதிப் பணிப்பாளர்களினதும் வைத்தியசாலை ஊழியர்களினதும் செயற்பாட்டை பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 

இதன் மூலம் ஒரு நிறுவனத்தின் வெற்றியானது கூட்டு முயற்சியின் வெளிப்பாடு என்பதை மக்கள் புரிந்து கொள்வதானது தனது மக்கள் செல்வாக்கினை குறைத்து விடுவதாக எண்ணி பிரதிப் பணிப்பாளர்களுடனும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடனும் முறுகலை ஏற்படுத்த தொடங்கியிருந்தார்.

வைத்தியசாலை நிர்வாகப் பணிமனையில் முன்னர் பிரதிப் பணிப்பாளர்களுடன் இணைந்து இயங்கிய ஊழியர்கள், அச்சுறுத்தல்களுக்கும், இடமாற்றங்கள் உட்பட மன உளைச்சலுக்கும் உள்ளானார்கள்.

பணிப்பாளரின் அத்துமீறல்களையும் போலி பிரச்சாரங்களையும் கண்டித்து இருந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இறுதியில் சீரான நேர்மையான நிர்வாகத்தினை உறுதிப்படுத்துவதாக பணிப்பாளரினால் உறுதியளிக்கப்பட்டதனால் தொழிற்சங்க நடவடிக்கைகளின்றி சீரான நிலைமையை சிறிதுகாலம் ஏற்படுத்தி இருந்தது.

ஆனாலும் பணிப்பாளரின் மருத்துவ நெறிக்கு புறம்பான நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் தொடர்ந்தன. தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளில் எடுக்கப்பட்டிருந்த முடிவுகள் மீறப்பட்டு பணிப்பாளரின் மிலேச்சத்தனமான நிர்வாகம் தொடர தொடங்கியதால் நாம் அவரது குற்றங்களை வெளிக்கொணர வேண்டிய தேவை ஏற்பட்டது. 

அரசியல் செயற்பாடு இல்லாத, சட்டத்திற்கு அமைவான, அனைத்து ஊழியர்களும் சுமூகமாக கடமையாற்றி நோயாளர்களுக்கு உரிய போதியளவு சிறப்பான சிகிச்சைகளை வழங்கக்கூடிய சிறந்த நிறுவனமாக போதனா வைத்தியசாலையை மாற்றுவதே எமது குறிக்கோளாகும். 

பணிப்பாளரின் தனிப்பட்ட வாழ்வினை பாதிக்கும் எந்தவொரு செயற்பாட்டையோ குற்றச்சாட்டையோ நாம் இதுவரை வெளிக்கொணரவில்லை. பணிப்பாளரின் செயற்பாடுகளை நிறுவனத்திற்கு உள்ளே விமர்சிக்கும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், 

மற்றும் சக பணியாளர்களுக்கு எதிராக புனையப்பட்ட விசாரணைகளை ஏற்படுத்துவதன் மூலம் சக பணியாளர்களை அச்சுறுத்தி தனது நடவடிக்கைகளை தொடர்தல், வரம்பை மீறி வைத்திய நிபுணர்களை சேவையிலிருந்து நிறுத்துதல், சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளை விமர்சிக்கும் பணியாளர்களுக்கு கீழ்த்தரமான தண்டனைகளை வழங்குதல், 

நிதிக் கையாளுகை தொடர்பான குற்றச்சாட்டு, கொரோனாவால் உயிரிழந்தவர்களை பக்கச்சார்பாக, சுற்றறிக்கைகளின் அறிவுறுத்தலுக்கு எதிராக வீடுகளுக்கு விடுவித்தல்,பொதுவான நிர்வாக செயல் இழப்புகள் போன்ற குற்றங்களை கண்டறிவதற்காக பக்கச்சார்பற்ற நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி உள்ளோம்.

பணிப்பாளர் மீண்டும் பதவியேற்றதும் தெரிவுசெய்யப்பட்ட பணியாளர்களை அச்சுறுத்தல், அடி பணிய வைத்தல், இடமாற்றம் வழங்கப்படுமென அச்சுறுத்தல்களை மேற்கொள்ளும் செயற்பாடுகளை முடுக்கிவிட்டு உள்ளார் என்றுள்ளது.

குற்றச்சாட்டு தொடர்பாக  பணிப்பாளரது விளக்கம்

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலைக் கிளை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பின.

வைத்தியசாலையின் பணிப்பாளராக நான் கடமையாற்றுகின்றபோது பல்வேறு குற்றச்சாட்டுகள் என்மீது சுமத்தப்படுகின்றன. எனவே இது தொடர்பாக விரைவில் சுகாதார அமைச்சிற்கு கடிதத்தின் மூலம் தெரிவித்து இதற்கான விசாரணைகளை ஏற்படுத்தி அதன் மூலம் தீர்வை கோரவிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், எந்த முறைப்பாடுகளாக இருந்தாலும் அவற்றை தீர விசாரித்து தீர்வுகளை வழங்க முயற்சிக்கின்றபோது வைத்தியசாலை அபிவிருத்தி பாதையினை நோக்கி வரும். தற்போது இருக்கும் சூழ்நிலையில் யாரும் எந்த குற்றச்சாட்டுக்களையும் முன் வைக்கலாம். 

ஊடகங்கள் என்ற ரீதியில் உண்மைத்தன்மையினை அறிந்து பிரசுரிப்பது நன்று .வைத்தியசாலை என்பது தனிப்பட்ட பணிப்பாளருக்கு உரித்தானது அல்ல. பொது மக்களுக்கு சேவைகள் சென்றடையும் நிலையமாகும். சேவையில் குறைபாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். 

சுட்டிக்காட்டப்படும் அனைத்து விடயங்களும் தொடர்பாக சுகாதார அமைச்சிற்கு கடிதம் எழுத இருக்கின்றேன். விரைவில் அவற்றை விசாரணை செய்து உரிய தீர்வை வழங்க வேண்டும், ஏனெனில் இந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளாது விட்டால் மக்கள் மத்தியில் ஒரு பிழையான கருத்தை கொண்டு செல்வதுடன்

இந்த சேவைகளில் பாதிப்புக்கள் ஏற்படுத்தும். மேலும் இந்த விடயங்கள் தொடர்ப்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற வேண்டும். எனவே எனது வரம்புக்குட்பட்ட கடமைகளை செய்வதற்கு எப்பவும் தயங்க மாட்டேன் என்றார்