இலங்கை அணியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய!!
அவுஸ்ரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ப்ரபாத் ஜயசூரிய இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அதேவேளை, மற்றொரு இடதுகை சுழல்பந்துவீச்சாளர் லக்ஷான் சந்தகான் தயார் நிலை வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.
சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா, சுழல்பந்துவீச்சாளர் ஜெவ்றி வெண்டர்சே, வேகப்பந்துவீச்சாளர் அசித்த பெர்னாண்டோ ஆகிய மூவரும் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனாதால் 5 தினங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ப்ரவீன் ஜயவிக்ரமவும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் நால்வரும் தற்போது ஒரே ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனஞ்சய டி சில்வா, ஜெவ்றி வெண்டர்சே, அசித்த பெர்னாண்டோ ஆகியோரின் அண்டிஜென் பரிசோதனை நேர்மறையாக இருந்ததால் இலங்கை குழாத்தில் உள்ள அனைவருக்கும் அண்டிஜென் பரிசோதனை நடத்தப்பட்டது.
மற்றையவர்களின் பரிசோதனை அறிக்கை எதிர்மறையாக இருப்பதால் அவர்கள் அனைவரும் நாளைய டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இலங்கை குழாத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ப்ரபாத் ஜயசூரிய உள்ளூர் போட்டிகளில் பிரகாசித்து வருவதால் இலங்கை குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
மூவகை உள்ளூர் போட்டிகளிலும் ப்ரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்துள்ளதுடன் 62 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 234 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இருப்பினும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்த மஹீஷ் தீக்ஷனவும் துனித் வெல்லாலகேயும் குழாத்தில் இடம்பெறுவதால் ப்ரபாத் ஜயசூரியவுக்கு டெஸ்ட் அறிமுகம் கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
இதேவேளை, தனஞ்சய டி சில்வாவுக்கு பதிலாக சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் நாளைய போட்டியில் அறிமுக வீரராக விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகமாகத் தென்படுகின்றது. கமிந்துவுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஓஷத பெர்னாண்டோ விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.