SuperTopAds

யாழ்.மாநகரின் கழிவகற்றல் பொறிமுறை முற்றாக முடக்கம்..! மாநகர மக்களிடம் மாநகரசபை சுகாதார குழு விடுத்துள்ள கோரிக்கை...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரின் கழிவகற்றல் பொறிமுறை முற்றாக முடக்கம்..! மாநகர மக்களிடம் மாநகரசபை சுகாதார குழு விடுத்துள்ள கோரிக்கை...

யாழ்.மாநகரசபையின் திண்ம கழிவகற்றல் செயற்பாடு முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக கூறியிருக்கும் யாழ்.மாநகரசபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன், எரிபொருள் நெருக்கடியினால் இவ்வாறான நிலையேற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது மக்களை பாதிக்கின்ற அளவிற்கு யாழ்.மாநகர சபையினுடைய செயற்பாடுகளையும் பாதித்திருக்கின்றது. 

இதனால யாழ்.மாநகரசபை முன்னெடுக்கின்ற திண்மக்கழிவு அகற்றல் செயற்பாடு மிகவும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் புதிய திண்மக் கழிவகற்றல் பொறிமுறை உருவாக்கப்பட்டது. 

இதற்கமைய யாழ்.மாநகரசபைக்கு உட்படட 27 வட்டாரங்களுக்கும் ஒரு உழவு இயந்திரம் என்ற அடிப்படையில் வழங்கப்பட்டு கழிவகற்றப்பட்ட போதும், தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் 9 உழவு இயந்திரங்களே கழிவகற்றும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

இது இடர்கால கழிவகற்றல் முகாமைத்துவத்தினை உருவாக்கியுள்ளது. வாரத்திற்கு ஒரு முறையாவது ஒரு வீட்டிற்கு செல்லவேண்டும் என்கிற மாநகர முதல்வரின் கோரிக்கைக்கேற்ப புதிய நேர அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் நெருக்கடியால் திண்மக் கழிவகற்றலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

கழிவுகளை அகற்ற முடியாத நேரங்களில் யாழ்.மாநகர சபைக்குட்பட்ட 9 இடங்களில் மக்கள் கழிவுகளை தரம் பிரித்துக் கொண்டு ஒப்படைக்கின்ற இடங்களாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம். 

ஏதோவொரு வகையில் தங்களுக்கு அருகில் உள்ள இதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் கழிவுகளை கொடுக்கமுடியும். இதனை சில நாட்களில் பத்திரிகை வாயிலாக பகிரங்கப்படுத்துவோம். 

காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை நடைபெறுவதற்கான ஒழுங்குகள் செயற்ப்படுத்தப்படவுள்ளது. எனவே இந்த இடர்கால கழிவகற்றல் முகாமைத்துவதற்காக மக்கள் பூரண ஒத்துழைப்பினை தர வேண்டும். 

அத்துடன் இயலுமான அளவிற்கு கழிவுகளை குறையுங்கள். மேலும் எமது ஊழியர்கள் ”பணம் தந்தால் தான் கழிவகற்றுவோம் என அழுத்தம் கொடுத்தால் அதனை யாழ்.மாநகரசபைக்கு அறிவித்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அவ்வாறு பணம் வாங்கியவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்றார்.0716390000 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பொதுமக்கள் தொடர்பு கொண்டு இவை தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்றார்.