சமாரி அதபத்து அதிரடி!! -இந்தியாவை வீழ்த்திய இலங்கை பெண்கள் அணி-
இலங்கை - இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணிகள் மோதிய 3 ஆவது மற்றும் கடைசி ரி-20 போட்டி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை எடுத்தது. அதிகப்பட்சமாக அணித்தலைவி கவூர் 39 ஓட்டங்களை எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் விஷ்மி குணரத்னே முதல் ஓவரில் வெளியேறினார். அடுத்து வந்த மாதவி 13 ஓட்டங்களில் வெளியேறினார். இந்நிலையில் அணித்தலைவி சமாரி அதபத்து- நிலாக்ஷி டி சில்வா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதிரடியாக விளையாடிய சமாரி அதபத்து அரை சதம் அடித்து அசத்தினார். நிலாக்ஷி டி சில்வா 30 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் வெளியேறினார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சமாரி அதபத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 48 பந்தில் 80 ஓட்டங்களை எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 14 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.
17 ஓவரில் இலங்கை அணி 141 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இலங்கை அணியின் தலைவி சமாரி அதபத்து சிறந்த வீராங்கனை விருதை தட்டி சென்றார். 3 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.