SuperTopAds

இடமாற்ற உத்தரவும் பயனில்லை, ஆளுநரின் உத்தரவும் பயனில்லை..! யாழ்ப்பாணத்திலேயே குந்தியிருக்கும் 27 அதிபர்கள், மண்டையை சொறியும் மாகாண கல்வி அமைச்சு..

ஆசிரியர் - Editor I
இடமாற்ற உத்தரவும் பயனில்லை, ஆளுநரின் உத்தரவும் பயனில்லை..! யாழ்ப்பாணத்திலேயே குந்தியிருக்கும் 27 அதிபர்கள், மண்டையை சொறியும் மாகாண கல்வி அமைச்சு..

பணி இடமாற்றம் வழங்கப்பட்டும் கடமைகளைப் பொறுப்பேற்காத 27 அதிபர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இதுவரைகாலமும் ஆசிரியர் நியமனத்திலும் தற்போதைய அதிபர் நியமனத்திலும் வெளி மாவட்டம் செல்லாத சுமார் 47 அதிபர்கள் யாழ்.மாவட்டத்தில் தங்கியிருப்பதாக யாழ்.கல்வி வலையத்திற்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தில் கண்டறியப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் முதற்கட்டமாக 27 பேருக்கு வெளி மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் வழங்கியிருந்தார். 

இவ்வாறான நிலையில் குறித்த 27 பேரும் வெளி மாவட்டம் செல்வதைத் தவிர்ப்பதற்காக மேன்முறையீடு செய்தனர். கல்வி அமைச்சின் செயலாளர் சில அதிபர்களின் இடமாற்றத்தை தடுக்க முயல்வதாக குற்றஞ்சாட்டி  ஏனையவர்களும் தமது கடமைகளை பொறுப்பேற்கப் பின்னடித்து வந்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து தகுந்த காரணங்கள் சமர்ப்பிக்காத அதிபர்களை உடனடியாக அவர்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

இந்நிலையில் தகுந்த காரணங்கள் சமர்ப்பிக்காத 22 அதிபர்களையும் தமது கடமைகளை பொறுப்பேற்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரினால் எழுத்து மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறியக் கிடைத்தது. 

பணி இடமாற்றம் வழங்கப்பட்ட 27 அதிபர்களும் வெளிமாவட்டத்திற்கு செல்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர்களது மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்ட நிலையில் கடமைக்கு செல்லவில்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இதற்கு பிரதான காரணமாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தனக்கு வேண்டிய இருவரின் அதிபர் இடமாற்றத்தை நிறுத்துவதற்கு முயற்சித்தமையே என கூறப்படுகின்றது. 

கல்வி அமைச்சின் செயலாளர் தமக்கு வேண்டிய சிலரை சந்தித்து இடமாற்றம் வழங்கப்பட்ட அதிபர்கள் அனைவரும் பதவிகளை பொறுப்பேற்ற பின்னர் உங்களுடைய இடமாற்றத்தை இரத்து செய்கிறேன் என உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும், 

அந்த விடயம்  ஏனைய அதிபர்களுக்கு தொியவந்ததால் அவர்கள் சுதாகரித்துக்கொண்ட நிலையில் எல்லோரும் சென்றால் தாமும் செல்வோம் என ஒருவரை ஒருவர் காரணம் காட்டி கடமையை பொறுப்பேற்காது பின்னடித்து வருகிறார்கள்.