SuperTopAds

ஆட்சியாளர்களே வியாபாரிகளாகவும் உள்ளமையால் நாட்டின் பொருளாதாரத்தை திடமாக பேண முடியவில்லை! யாழ்.பல்கலைகழக வணிக முகாமைத்துவ பேராசிரியர்..

ஆசிரியர் - Editor I
ஆட்சியாளர்களே வியாபாரிகளாகவும் உள்ளமையால் நாட்டின் பொருளாதாரத்தை திடமாக பேண முடியவில்லை! யாழ்.பல்கலைகழக வணிக முகாமைத்துவ பேராசிரியர்..

இலங்கையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் வணிகம் செய்பவர்களாக காணப்படுவதால் நாட்டின் பொருளாதாரத்தை திடமாக பேண முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் சுற்றுலாத்துறை இணைத் தலைவர் பேராசிரியர் சிவானந்த மூர்த்தி சிவேசன் தெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை யாழ்.நகரிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தொழில்துறை மன்றத்தின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சங்க இலக்கியங்களில் ஆள்பவன் வேறு வணிகம் செய்பவர்கள் வேறாகக் காணப்பட்ட நிலையில் இருவருக்கு இடையிலும் அறத்தின்பால் ஒற்றுமை இருந்தது.

ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் ஆழ்பவர்கள் வணிகம் செய்பவர்களாக காணப்படுவதால் தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. 

அதில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கையாள்வதற்கு குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகளை முன்வைக்க வேண்டும். இலங்கையின் நிரந்தர பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்த முடியாமைக்கான காரணங்களாக 

அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக ஸ்த்திரத்தன்மை இல்லாமையும் காரணங்களாக அமைகின்றன. அம்பாந்தோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்றபோதிலும் அனேகமான திட்டங்கள் நிலையான அபிவிருத்தி திட்டங்களாக இல்லை.

1972 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட விவசாய நிலங்களின் அளவை காட்டிலும் தற்போது பயிர்ச்செய்கை நிலங்கள் வெகுவாக குறைந்துள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் அநேகமான பிரதேசங்களில் வாழை செய்யப்படும் நிலையில் அவற்றின் இலை பழங்கள் மட்டும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்ற நிலையில் வாழையின் ஏனைய பாகங்களை பொருளாதார ரீதியாக பயன் அடைவது இல்லை.

இந்தியாவில் வாழைத் தாரில் நூல் எடுத்து ஆடைகள் தயாரிப்பதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். யாழ்.வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தீவகத்தில் நயினாதீவையும் சாட்டி கடற்கரையையும் யாழில் நல்லூர் ஆலயத்தையும் பார்ப்பதே வழக்கமாக இருக்கிறது.

யாழ் குடாநாட்டில் ஏழு தீவுகள் இருக்கின்றத நிலையில் ஏன்? எம்மால் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியாதுள்ளமை தொடர்பில் எவரும் பேசுவதாக தெரியவில்லை.

ஆகவே யாழ்ப்பானத்தின் சுற்றுலாத்துறையை மற்றும் சித்த ஆயுள்வேததுறை போன்றவற்றை நவீன பொருளாதார உலகிற்கேற்ப திட்டங்களைத் தயாரித்து செயற்படுத்துவதற்கு அதிகாரங்களில் இருப்பவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.