SuperTopAds

யாழ்.மாவட்டத்தில் பங்கீட்டு அட்டை முறையில் சமையல் எரிவாயு விநியோகம்..! பிரதேச செயலர், கிராமசேவர் கண்காணிப்பில்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பங்கீட்டு அட்டை முறையில் சமையல் எரிவாயு விநியோகம்..! பிரதேச செயலர், கிராமசேவர் கண்காணிப்பில்...

யாழ்.மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் இனிமேல் பங்கீட்டு அட்டை முறையில் கிராமசேவகர்கள், பிரதேச செயலர்களின் கண்காணிப்பில் இடம்பெறும் என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். 

இன்று காலை மாவட்டச் செயலகத்தில் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

மாவட்டத்திற்கு வழங்கமாக கிடைப்பதை காட்டிலும் மிக குறைந்தளவு சமையல் எரிவாயுவே தற்சமயம் கிடைக்கின்றது. இதனால் பல நடைமுறை சிக்கல்கள் எழுந்திருக்கின்றன. 

நேற்றும், இன்றும் சில தவிர்க்க முடியாத சம்பவங்களும் நடந்திருப்பதை அவதானிக்க முடிந்ததுடன், கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு எரிவாயு சிலின்டர்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் முறையிடுகின்றனர். 

இவ்வாறான சிக்கல்களை தவிர்த்து உரியமுறையில் எரிவாயு தேவையான மக்களுக்கு அதனை கொண்டு சேர்ப்பது தொடர்பாக நேற்று மாலை ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கின்றது. 

அதில் பங்கீட்டு அட்டையின் அடிப்படையில் எரிவாயு விநியோகத்தை எதிர்வரும் நாட்களில் கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலர் கண்காணிப்பில் வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. 

அது இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் இறுதி செய்யப்படும். அதற்கமைய மக்கள் வதந்திகளை நம்பாமல், கறுப்பு சந்தைகளில் அதிக விலை கொடுத்து வாங்காமல் புதிய நடைமுறைக்கு ஒத்துழைப்பு வழங்கி 

தத்தமது பிரதேச முகவர்கள் ஊடாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் முன்னுரிமை அடிப்படை மற்றும் கிடைக்கின்ற சமையல் எரிவாயு அளவு போதாமை போன்றவற்றினால் ஒரே நேரத்தில் எல்லா இடங்களுக்கும் வழங்க முடியாத நிலை உருவாகலாம். 

ஆனால் பகுதி பகுதியாக மாவட்டம் முழுவதும் அது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மாவட்டச் செயலர் கூறியுள்ளார்.