யாழ்.ஆரியகுளத்தில் வெசாக் கூடுகளை கட்ட அனுமதி மறுத்த யாழ்.மாநகரசபை..! மாநகரசபையை கலைப்பேன் என மிரட்டினாராம் ஆளுநர் ஜீவன்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆரியகுளத்தில் வெசாக் கூடுகளை கட்ட அனுமதி மறுத்த யாழ்.மாநகரசபை..! மாநகரசபையை கலைப்பேன் என மிரட்டினாராம் ஆளுநர் ஜீவன்..

யாழ்.மாநகரசபையின் முயற்றிசியால் புனரமைக்கப்பட்டு, பராமரிக்கப்படும் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளை கட்டுவதற்கு படையினர் முன்னைத்த கோரிக்கையினை யாழ்.மாநகரசபை நிர்வாகம் நிராகரித்துள்ளது. 

நேற்று ஞாயிற்றுக்கிழமையும், இன்று திங்கட்கிழமையும் வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற நிலையில் நேற்று யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட படை அதிகாரி ஒருவர் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கையை முன்வைத்தார். 

எனினும் ஆரியகுளம் பகுதியில் எந்தக் காலத்திலும், எந்த மத அடையாளங்களையும் காட்சிப்படுத்த அனுமதிப்பதில்லை என யாழ்.மாநகர சபையில் கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் தீர்மானம் இயற்றப்பட்டிருப்பதனால், 

சபை அனுமதி இல்லாமல் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்க முடியாது என ஆணையாளர் தெரிவித்ததாக்க் கூறப்படுகிறது. இதனையடுத்து, ஆணையாளருடன் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட வடமாகாண ஆளுநர் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறும், 

தவறும் பட்சத்தில் தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ்.மாநகர சபையைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்ததையடுத்து யாழ். மாநகர சபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்று ஆணையாளரினால் நிகழ்நிலையில் நடாத்தப்பட்டது. 

யாழ். மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் விடுமுறையில் வெளிநாடு சென்றிருப்பதனால், பிரதி முதல்வர் து.ஈசன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. மாநகர முதல்வரும் வெளிநாட்டிலிருந்தவாறே கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். 

வெசாக் கொண்டாடப்படும் திகதி நிர்ணயிக்கப்பட்ட ஒரு தினம் ஆகையால் போதிய கால இடைவேளையில்லாமல் வெசாக் தினத்தன்று, அதுவும் தொலைபேசி வாயிலாக அனுமதி கோரப்பட்டமை உறுப்பினர்களிடையே விசனத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், 

முறையான எழுத்து மூல அனுமதி கோரப்படுமிடத்து அதுபற்றி பரிசீலிக்கலாம் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இது பற்றி வடமாகாண ஆளுநருக்கும், உள்ளூராட்சி ஆணையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு