SuperTopAds

யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான குளத்திலிருந்து நீரை உறிஞ்சும் தனியார் கட்டுமான நிறுவனம்..! மாநகரசபைக்கு தொியாதாம், அனுமதியும் கொடுக்கவில்லையாம்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபைக்கு சொந்தமான குளத்திலிருந்து நீரை உறிஞ்சும் தனியார் கட்டுமான நிறுவனம்..! மாநகரசபைக்கு தொியாதாம், அனுமதியும் கொடுக்கவில்லையாம்...

யாழ்.றக்கா வீதியில் உள்ள நரிக்குண்டு குளம் அல்லது பிள்ளையார் குளம் என அழைக்கப்படும் குளத்திலிருந்து தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று தொடர்ச்சியாக நீரை எடுத்துவருவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

யாழ்.குடாநாட்டின் நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காக அண்மையில் பெரு நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த குளம் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

குளம் புனரமைக்கப்படும்போது குளத்திலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மண் மீண்டும் குளத்தின் உற்புற இருமருங்கிலும் போடப்பட்டதாக அப்போது குற்றச்சாட்டப்பட்டது.

இவ்வாறான நிலையில் பல இலட்சம் ரூபா செலவில் குளத்தின் புனரமைப்புக்கள் அனைத்தும் முடிவுற்று அழகுற காட்சியளிக்கும் நிலையில் தனியார் நிறுவனம்  குளத்திலிருந்து நீரை எடுத்துவருகின்றது. 

இதனால் குளம் என்ன நோக்கத்திற்காக புனரமைப்பு செய்யப்பட்டதோ அந்த நோக்கத்தை அடையப்போவதில் என கூறும் மக்கள், இது தொடர்ந்தால் குளத்தின் சுற்றாடலில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் குறையும் எனவும், 

உவர் நீர் உட்புகும் அபாயம் உள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விடயம் தொடர்பில் யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் ஜெயசீலனை தொடர்பு கொண்டபோது மேற்படி குளத்திலிருந்து நீர் எடுப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. என கூறினார்.