யாழ்.ஆறுகால்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர், விசாரித்த இளைஞனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓட்டம், பொலிஸார் அசமந்தம் என மக்கள் சாடல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆறுகால்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர், விசாரித்த இளைஞனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓட்டம், பொலிஸார் அசமந்தம் என மக்கள் சாடல்...

யாழ்.ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரை அப்பகுதி இளைஞர் ஒருவர் விசாரித்த நிலையில் குறித்த இளைஞனை தாக்கியதுடன், கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடியவர்களில் ஒருவரை இளைஞர்கள் துரத்தி பிடித்தபோதும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வராமையால் அவர் சூசகமாக தப்பி சென்றுள்ளார். 

நேற்று முன்தினம் 1ம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக பிரதேச மக்கள் தகவல் தருகையில், எமது பகுதியில் அடுத்தடுத்து ஒரு கொள்ளை சம்பவமும், கொள்ளை முயற்சியும் இடம்பெற்றிருக்கின்றது. இதனால் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் உசாராக இருந்து வருகின்றார்கள். 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் 1ம் திகதி மாலை 4 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதையும், கிராமத்திற்குள் உள்ள வீதி ஒன்றில் நிற்பதையும் அவதானித்த இளைஞர் ஒருவர் யார் நீங்கள்? எதற்காக இங்கே நிற்கிறீர்கள்? என வினவிய நிலையில், 

குறித்த இளைஞனும் தகராறு புரிந்த இனந்தொியாத இளைஞர்கள் இருவரும் தலைக்கவசத்தால் தாக்கியதுடன், சிறிய கத்தி ஒன்றினால் கை மற்றும் காலில் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். மேலும் தலைக்கவசத்தால் தாக்கியபோது அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வீதியில் கொட்டியதுடன், மோட்டார் சைக்கிளையும் விட்டு தப்பி ஓடியுள்ளனர். 

இதனால் சந்தேகமடைந்த பிரதேச இளைஞர்கள் துரத்தி சென்று கொக்குவில் மேற்கு பகுதியில் ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். எனினும் நீண்டநேரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதராமையால் அப்பகுதிக்கு வந்த ஒருவர் தான் பொலிஸாரிடம் ஒப்படைப்பதாக கூறி 

அந்த நபரை அழைத்துச் சென்றுள்ளார். இது நடந்து சிறிது நேரத்தின் பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தபோது அங்கு கூடியிருந்த இளைஞர்கள் நடந்த அத்தனை சம்பவங்களையும் கூறியுள்ளனர். இந்நிலையில் இளைஞர்களால் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை அழைத்துச் சென்றவரை தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கூறிய நிலையில், 

அவரை தொடர்பு கொண்டபோது தான் அழைத்துச் சென்றவன் தன்னை தள்ளிவிட்டு ஓடிவிட்டதாக கூறியுள்ளார். எனினும் அங்கு கூடியிருந்த சிலருக்கு தப்பி ஓடிய நபர் யார் என்பது தொியும் என கூறியபோதும் பொலிஸார் மேல் நடவடிக்கை எதனையும் எடுக்காமல் விலகியுள்ளனர். என பிரதேச மக்கள் மேலும் கூறுகின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு