SuperTopAds

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கூட்டம் நடாத்த பல்கலைகழக மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு...

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கூட்டம் நடாத்த பல்கலைகழக மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் இன்று பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டமையினால் விருந்தினர் விடுதி ஒன்றில் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டம் இன்று (11) காலை 10.30 மணிக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் மாணவ பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழில்நுட்ப்பக்கல்லூரி மாணவ பிரதிநிதிகள், கோப்பாய் மற்றும் பலாலி ஆசிரியர் கலாசாலை மாணவ பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடர்பில் கோரிய, உரிய தகவல் திரட்டுக்கள் கிடைக்காமையினால் அனுமதி வழங்கமுடியவில்லை – பல்கலை பதிவாளர்.

கூட்டம் தொடர்பில் நாம் கோரிய உரிய தகவல் திரட்டுக்கள் உரிய நேரத்துக்குள் கிடைக்கப்பெறாமையினாலேயே அனுமதி வழங்கப்படாமைக்கு காரணம் என யாழ்.பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான மாணவ ஒன்றியத்தின் கூட்டத்தை வளாகத்தில் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டம் நடத்துவதற்கான அனுமதிக்கான கோரிக்கை கடிதமானது எனக்கு நேற்று  (10) மாலை 5.30 மணியளவிலேயே கிடைக்கப்பெற்றது. நிர்வாக ஒழுங்குமுறைக்கு அமைவாக வளாகத்தில் ஒரு கூட்டம் நடத்துவதற்கான அனுமதிக்கான கோரிக்கை ஒரு கிழமைக்கு முன்னதாக விடுக்கப்படவேண்டும்.

கோரிக்கை விடுக்கப்பட்ட கூட்டமானது எதற்கானது?, பங்குதாரர்கள் யார்? போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படவேண்டும். பின்பு இத்தகவல்களைக்கொண்டு உரிய தரப்புடன் கலந்துரையாடி துணைவேந்தர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு பின்பே அனுமதி அளிக்கப்படும்.

இத்தகவல்களை நாம் கோரிக்கை விடுத்தவர்களிடத்து கோரியிருந்தோம் அவர்கள் அத்தகவல்களை உரிய நேரத்துக்குள் எம்மிடம் சமர்ப்பிக்கவில்லை. இதுவே கூட்டத்திற்கான அனுமதி வழங்கப்படாமைக்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்.