SuperTopAds

ரஷ்யவுடன் இணையும் விசேட யுத்த பயிற்சி பெற்ற கூலிப்படை!!

ஆசிரியர் - Editor II
ரஷ்யவுடன் இணையும் விசேட யுத்த பயிற்சி பெற்ற கூலிப்படை!!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுடன் சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளில் விசேட யுத்த பயிற்சியினை பெற்ற ரஷ்ய கூலிப்படையினர் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெக்னர் ஆயுத குழுவை சேர்ந்த தனியார் இராணுவம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் நீண்ட கால தொடர்பை கொண்டுள்ளது. இந்த ஆயுத குழுவை சேர்ந்த சுமார் 1,000 பேர், ரஷ்ய படைகளுடன் இணைந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா ஆக்கிரமிப்பினை மேற்கொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் இந்த ஆயுத குழுவை சேர்ந்த 300 பேர் ரஷ்ய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார். 

உக்ரைனில் உள்ள டொன்பாஸ் பிரதேசத்தில், ரஷ்ய படையின் ஆதரவுடன் 2014 ஆம் ஆண்டு முதல் செயல்படும் பிரிவினைவாத ஆயுத குழுவினருடன் இந்த கூலிப்படையினர் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு மேலாக உக்ரைனில் ரஷ்யாவினால் மேற்கொள்ளப்படும் யுத்தத்தில், திட்டமிட்ட இலக்கை கிரம்ளின் அடையவில்லை என்பது கூலிப்படையினரை இணைத்துக்கொள்ளும் விடயம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்ய தரப்பினர் உக்ரைனின் ஏனைய பகுதிகளை விட டொன்பாஸ் பிரதேசத்தில், இராணுவ நடவடிக்கைகளை அதிகரிப்பர் எனவும் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, வெக்னர் ஆயுத குழுவை சேர்ந்த இந்த தனியார் கூலிப்படை இராணுவம், ரஷ்யாவுடன் ஒப்பந்த அடிப்படையில் நீண்ட காலமாக தொழில்படுபவர்கள் என பென்டகனின் தலைமை பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார்.