SuperTopAds

யாரை நோவோம்..? யார்க்கெடுத்துரைப்போம்..? ஒரு ஊடகவியலாளனின் சமூக பார்வையில் ...

ஆசிரியர் - Editor I
யாரை நோவோம்..? யார்க்கெடுத்துரைப்போம்..? ஒரு ஊடகவியலாளனின் சமூக பார்வையில் ...

வடக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்று, அதன் ஆட்சிபீடமேறி வழிநடத்தியவர்களின் இறுதி நகர்வு இப்பொழுது அரங்கேறிக்கொண்டிருக்கிறது. 

இத்தனைகாலமும் தங்களுக்கு நிதி கிடைக்கவில்லை, ஆளுநரின் பாராமுகத்தால் அபிவிருத்திகளைச் செய்ய முடியவில்லை, மத்திய அரசாங்கத்தின் கெடுபிடிகள் தொடர்கின்றன என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட அனைத்து உறுப்பினர்களும் குற்றஞ்சாட்டிவருகின்றனர். 

இதில் உண்மை இல்லாமலுமில்லை. ஆனால், கிடைத்த அதிகாரத்தில் ஒரு பகுதியையாவது உருப்படியாகச் செய்திருக்க முடியும் என்பதே எமது ஆதங்கம்.

கடந்த வியாழக்கிழமை (மே 03), அக்கராயன் பகுதிக்குச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. முறிகண்டியிலிருந்து அக்கராயன் செல்லும் வீதியில், சுமார் 8 கிலோமீற்றர்கள் செல்லும் வரை பாதைச் சீரமைப்பு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கிறது. 

அந்த வீதிகளிலும் மணல் கொள்ளையர்களின் கனரக வாகனங்கள் சென்று வருகின்றமையால் இடையிடையே குழிகள் தோன்றியிருக்கின்றன. இதையும் கவனிப்பாரில்லை. அக்கராயன் அணைக்கட்டுப் பிரதேசத்துக்கு அப்பால் செல்கின்ற வீதிப் புனரமைப்பு என்பது நினைத்தும் பார்க்க முடியவில்லை. வெறும் சேற்றுப் பாதையாகவே, புனரமைக்க முடியாத வீதியாக அது காணப்பட்டது. 

அந்த வீதியில் செல்கின்றபோதுதான் வன்னேரிக்குளம் வருகிறது. வடமாகாணத்தின் இயற்கை கொஞ்சும் குளம் அது. அதனை அண்டியதாக, வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக்கொடை நிதி (Provincial Specific Development Grant (PSDG)) உதவியுடன் கட்டப்பட்ட சுற்றுலா மையமொன்றும் இருக்கிறது. 

“வன்னேரிக்குளம் சுற்றுலா மய்யம் அழகுபடுத்தல் வேலைத்திட்டம்” என்ற அடைமொழிக்குள், 6 மில்லியன் ரூபாய் செலவில், கடந்த வருடம், அதாவது 2017ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி, வடமாகாண முதலமைச்சரால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட இந்த சுற்றுத்தளத்தின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.

ஒரு வருடத்துக்குள் சின்னாபின்னமாகியிருக்கும் இந்த சுற்றுலாத் தளத்துக்கு யார் பொறுப்புக் கூறுவது? கரைச்சி பிரதேசசபைக்குட்பட்ட இந்த சுற்றுலாத் தளத்தைப் பராமரிப்பதற்கு எவருமில்லையா? உடைந்து, உருக்குலைந்திருக்கும் இந்தக் கட்டடத்தைக் கட்டிக்கொடுத்தவர்கள் யார்? 

அதற்கான விலைகோரலைப் பெற்ற வழிமுறை என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட, அனைத்து மாகாணசபை உறுப்பினர்களும் பதில் சொல்லியாக வேண்டும். தகவலறியும் உரிமை மூலமாக இதற்கான பதில் பகிரங்கப்படுத்தப்படும். 

மக்கள் பணத்தை வீண் விரயம் செய்யும் துப்புக்கெட்ட தனத்தை இனியும் செய்யாமல் தடுப்பதற்கு மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். மக்களுக்குத் துரோகம் செய்யும் போலித் தேசியவாதிகளைத் துகிலுரிக்க வேண்டிய பொறுப்பு, வாக்காயுதத்தைக் கையில் வைத்திருக்கும் வாக்காளருக்கிருக்கிறதென்பதை உணர்வது காலத்தின் கட்டாயமாகிறது.

மூலம்..சமூக வலைத்தளம், ஊடகவியலாளர் ஏ.பி.மதன்.