முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினாலேயே நடத்தப்படும்...

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடமாகாணசபையினாலேயே நடத்தப்படும்...

மே - 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை கடந்த 3 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டது போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடத்ததும். அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும்" 

இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் உறுதிபடத் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் பிரதேச சபைக்குட்பட்ட காணியாகும். அது எனது உள்ளூராட்சி அமைச்சுக்கு கீழ் வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனைத்து தமிழ்  கட்சிகள் - பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்துவது என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்திருந்தது. அந்த நிகழ்வை பேரழுச்சியுடன் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.

மே - 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு இன்று காலை கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் அவைத் தலைவர், மாகாண அமைச்சர்கள், மற்றும் உறுப்பினர்களில் பெரும்பாண்மையானவர்கள் பங்கேற்றனர். 

கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், 

"கடந்த 3 ஆண்டுகளாக முன்னெடுத்தது போன்று மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு மாகாண சபையே ஒழுங்கு செய்து நடாத்தும். இதுவே மாகாண சபையின் பெரும்பாலான உறுப்பினர்களின் விருப்பமும்.

எமது இனத்துக்கு ஏற்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் நிகழ்வை எம்முடன் இணைந்து முன்னெடுக்க பொது அமைப்புக்கள் பல முன்வந்துள்ளன.

நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்த மாகாண சபை உறுப்பினர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

அந்தக் குழு வரும் 9ஆம் திகதி மு.ப. 11.30 மணிக்கு கூடி ஒன்றுபட்டு அனைவரும் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பது பற்றி ஆராயும். கைதடியிலுள்ள முதலமைச்சர் மாநாட்டு மண்டபத்தில் இந்த கூட்டம் இடம்பெறும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மாகாண சபையுடன் இணைந்து நடத்த விரும்பும் பொது  அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவரை இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடாத்துவது தொடர்பில் எம்முடன் பேச்சு நடத்தினர். அவர்கள் தாங்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வை  நடத்துவதற்கு விரும்பம் கொண்டிருப்பதை அறிந்தேன்.

கடந்த ஆண்டு 4 இடங்களில் நடைபெற்றது போன்று அல்லாமல் ஒரே இடத்தில் நினைவேந்தலை நடாத்த தாம் சகல ஒழுங்குகளையும் முன்னெடுப்பதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

எனினும் வடக்கு மாகாண சபை ஜனநாயக முறையில் நிகழ்வை நடாத்தும் என்பதை அவர்களுக்கு எடுத்துக்கூறினேன். 

நினைவேந்தலை எவ்வாறு நடாத்தவேண்டும் என்ற ஒழுங்குமுறையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எம்மிடம் கூறினர்.

அவர்களின் திட்டத்தை நாளைமறுதினம் புதன்கிழமை (9) நடைபெறும் கூட்டத்தில் எடுத்துக்கூறுமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்" என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு