மக்கள் தங்கியிருந்த பாடசாலை கட்டடத்தை குண்டு வீசி தகர்த்த ரஷிய படை!! -மரியுபோல் நகரில் கோரம்-
உக்ரைன் மீது ரஷிய படைகள் இன்று 25 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து உக்ரைன் நகரங்களிலும் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷிய இராணுவத்துக்கு எதிராக உக்ரைன் இராணுவத்தினர் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் உக்ரைனின் இராணுவ நிலைகளை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் ஏராளமான இராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டன.
கடந்த சில நாட்களாக மரியுபோல் நகரம் மீது தொடர்ந்து ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது நகருக்குள் ரஷியாவின் பெரும் படைகள் நுழைந்து தாக்குதல் நடத்துகின்றன. ரஷிய படைக்கும் உக்ரைன் இராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே மரியுபோல் நகரில் பொதுமக்கள் தங்கியிருந்த பாடசாலை கட்டடம் மீது ரஷிய இராணுவம், குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதேபோல் கார்கிவ் நகரில் ரஷிய படை ஷெல் குண்டுகளை வீசி தாக்கியதில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.