கீவ் நகரை நெருங்கும் ரஷிய படைகள்!! -தீவிரமடையும் வான்வழி தாக்குதல்-
ரஷிய படைகள் வட கிழக்கில் இருந்து உக்ரைனின் தலைநகர் நோக்கி முன்னேறி வருகின்ற நிலையில் கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷிய படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே நேரத்தில் வடக்கு மற்றும் கீவ் நகரைச்சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றனர். ரஷிய படைகள், கீவ் நகரை சுற்றிவளைக்க தீவிரம் காட்டுகின்றன.
உக்ரைனின் வடக்கு, மேற்கு, வடகிழக்கு ஆகிய இடங்களை சுற்றி ரஷிய படைகள் முன்னேறிவிட்டன. இதனால், விரைவில் கீவ் நகரத்தை முழுமையாக ரஷிய படைகள் சுற்றி வளைக்கும் என்று கூறப்படுகிறது.
பல இடங்களில் வான் வழி தாக்குதல்களையும் ரஷிய படைகள் நடத்தி வருகின்றன. மேற்கு நகரமான லிவிவ் நகரத்தில் உள்ள இராணுவ தளத்தில் ரஷிய படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் 53 பேர் படுகாயம் அடைந்ததாகவும் உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
ரஷிய படைகள் நடத்திய இராணுவ தளம் லிவிவ் நகரில் இருந்து 25 மைல் தொலைவில் அமைந்திருக்கும் யாவிரோவ் என்ற இடத்தில் உள்ளது. இந்த தளத்தில் தான், உக்ரைன் படை வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். வெளிநாட்டு இராணுவ பயிற்சியாளர்களும் இதில் பங்கேற்று வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.
அந்த வகையில், அமெரிக்கா, கனடா நாட்டு இராணுவ பயிற்சியாளர்களும் இதில் பங்கேற்று பயிற்சித்து அளித்து இருக்கின்றனர். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கியதும், வெளிநாட்டு பயிற்சியாளர்கள் இந்த இராணுவ தளத்தில் இருந்து வெளியேறிவிட்டது குறிப்ப்பிடத்தக்கது.