ரஷியாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்!! -ஐ.நா கூட்டத்தில் அமெரிக்கா எச்சரிக்கை-
உக்ரைன் மேலும் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டால் ரஷியாவிற்கு கடுமையான தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஐ.நா பாதுகாப்பு சபை அவசர கூட்டத்தில் அமெரிக்க பிரதிநிதி எச்சரித்துள்ளார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபை இன்று செவ்வாய்க்கிழமை அவசர கூட்டத்தை நடத்தியது. குறித்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் பிரதிநிதி லிண்டா தாமஸ்-கிரீன்பீல்ட் பேசுகையில்,
“ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த நடவடிக்கை, உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மீதான ரஷ்யாவின் தெளிவான தாக்குதல் ஆகும். இது உக்ரைனின் ஐ.நா உறுப்பு நாடு என்ற அந்தஸ்து மீதான தாக்குதலாகும். இது சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறும் நடவடிக்கை.
உக்ரைன் போரை தூண்டியதாக ஒரு சாக்குப்போக்கை உருவாக்க ரஷ்யா முயன்றது. இந்த நடவடிக்கை, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பிற்கான ரஷ்யாவின் முயற்சியாகும். இது ஒரு போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது.
உக்ரைன் மேலும் மேலும் ஆக்கிரமிக்கப்பட்டால், அதன் விளைவுகள் உலகம் முழுவதும் முக்கியமானதாக இருக்கும், ஐரோப்பா முழுவதும் அகதிகள் நெருக்கடி இருக்கும்.
சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறியதற்காக ரஷ்யாவை பொறுப்பேற்க செய்வதற்கான கூடுதல் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்கும். உக்ரைனை மேலும் ஆக்கிரமிப்பதற்கு ரஷ்யாவிற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இந்த நிலைப்பாட்டில் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளும் தெளிவாக இருக்கிறோம். இந்த நேரத்தில் யாரும் ஓரணியில் நிற்க முடியாது என்றார்.