SuperTopAds

ஆனந்தசங்கரி - சுரேஸ் இணைந்து புதிய கூட்டணி! - உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி

ஆசிரியர் - Admin
ஆனந்தசங்கரி - சுரேஸ் இணைந்து புதிய கூட்டணி! - உள்ளூராட்சித் தேர்தலில் போட்டி

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்திருப்பதாக ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தனித்து பொது சின்னம் ஒன்றில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் பொது கூட்டணி ஒன்றினை உருவாக்கியிருந்தார்கள். எனினும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னம் தொடர்பில் எழுந்த பிரச்சினை குறித்து, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்-

'தற்போது சில பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன, அந்த பிரச்சினை கொள்கை ரீதியான பிரச்சினை அல்ல. தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடுவதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விரும்பவில்லை.ஆனால் தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடுவதனை ஒரு தற்காலிக ஒழுங்காக எடுத்துக் கொண்டு தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்த சந்தர்ப்பம் இருக்கிறது. அதற்கான காலம் முடிவடைந்துவிடவில்லை.

உள்ளூராட்சிசபை தேர்தல் என்பது தேசிய அளவில் முக்கியத்துவம்வாய்ந்த தேர்தலாக இல்லை. அது கிராமிய மட்டத்தில் அபிவிருத்திகளை இலக்காக கொண்ட தேர்தலாகும். ஆனால் உள்ளூராட்சிசபை தேர்தல் வெற்றியின் ஊடாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையினை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என காட்டுவதற்கு தமிழரசு கட்சி ஆர்வம் காட்டுகிறது.ஆனால் வெளியாகியிருக்கும் இடைக்கால அறிக்கை என்பது மிக பிழையான ஒன்றாகும். எனவே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகள், மாநகரசபைகள், நகரசபைகளை கைப்பற்றுவதனால் தமிழரசு கட்சி மேற்கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு பிழையான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு பொதுவான ஒரு எதிரணி தேவை என்பது உணரப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் தேசிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, கிராமிய அபிவிருத்திகளையும் கருத்தில் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்ச்சியாக பேச்சு நடத்தப்பட்டு பலமான பொது எதிரணி ஒன்றை உருவாக்க நினைத்தோம். அதில் சமூகத்தில் உள்ள பல அமைப்புக்களையும் இணைத்து செயற்பட தீர்மானித்திருந்தோம். அந்தவகையில் பலராலும் ஆதரிக்கப்பட்ட, தந்தை செல்வாவாலும் ஆதரிக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் இது ஒருதற்காலிகமான ஏற்பாடு மட்டுமே. தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் சகல தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று தீர்மானிக்கலாம் எனவும் தீர்மானித்திருந்தோம். ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை நிராகரித்துள்ளதுடன், அதற்காக பல்வேறு காரணங்களையும் கூறியிருக்கின்றது. எனவே எமக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கைரீதியான பிரச்சினைகள் எவையுமில்லை.அதேபோல் நாம் இணங்கி செயற்படுவதற்கான காலமும் அதிகம் உள்ளது. எனவே எந்த வகையில் தொடர்ந்து இணைந்து செயற்படலாம் என தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நாங்கள் நடத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.