SuperTopAds

நடுவானில் கொரோனா உறுதி!! -பல மணி நேரம் கழிவறையிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பெண்-

ஆசிரியர் - Editor II
நடுவானில் கொரோனா உறுதி!! -பல மணி நேரம் கழிவறையிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பெண்-

நடுவானில் விமானத்தில்  பறந்துகொண்டிருந்தபோது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து பெண் பயணி பல மணி நேரம் கழிவறையிலேயே தன்னை தனிமைபடுத்திக்கொண்டார்.

அமெரிக்கா நாட்டின் மிசிகன் மாகாணத்தை சேர்ந்தவர் மரிசா ப்டியோ. இவர் சிகாகோ மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையில், மரிசா தனது குடும்பத்தினருடன் சுற்றுலா பயணமாக கடந்த 19த ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்கு புறப்பட்டனர். சிகாகோவில் இருந்து விமானம் மூலம் ஐஸ்லாந்து செல்லும் விமானத்தில் புறப்பட்டனர். 

சிகாகோவில் விமானத்தில் பயணிப்பதற்கு முன்பாக மரிசா 2 முறை பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் 5 முறை ரேபிட் பரிசோதனை செய்துள்ளார். இந்த அனைத்து பரிசோதனையிலும் மரிசாவுக்கு கொரோனா இல்லை என்றே முடிவு வந்துள்ளது. அதுமட்டுமின்றி மரிசா பூஸ்டர் டோஸ் உள்பட 3 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

இதனால் குடும்பத்தினருடன் அவர் பயணம் செய்துகொண்டிருந்தார். அட்லாண்டிக் கடல் பரப்புக்கு மேலே விமானம் பறந்துகொண்டிருந்தபோது மரிசாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு தொண்டை கரகரப்பு மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது.

இதனால், தனக்கு கொரோனா இருக்குமோ? என்று சந்தேகத்த அவர் விமானத்தில் உள்ள கழிவறைக்கு சென்று தான் வைத்திருந்த ரேபிட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு ’பாசிடிவ்’ என பரிசோதனை முடிவு வந்தது. 

இதையடுத்து, விமானத்தில் உள்ள ஒரு கழிவறையில் மரிசா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். அந்த கழிவறையை பிறர் பயன்படுத்தாத வகையில் விமானப்பணிப்பெண் ராக்கி அதை பூட்டி வைத்தார்.

விமானம் ஐஸ்லாந்தில் தரையிறங்கும் வரை 3 மணி நேரத்திற்கு மேலாக மரிசா விமானத்தின் கழிவறையிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருந்துள்ளார்.