இரண்டாம் மொழி கற்கையை நிறைவுசெய்த 140 பேருக்கு விரைவில் ஆசிரியர் நியமனம்!
வடமாகாணத்தில் இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் பயிற்றப்பட்ட 140 பேருக்கு விரைவில் நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக இந்து பௌத்த கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளரும் தேசமானிய எம்.டி.எஸ் இராமச்சந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்து பௌத்த பேரவையினால் இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டாம் மொழியான சிங்கள மொழிப் பயிற்சியை பெற்றுள்ளனர்.
அவர்களில் திறமையானவர்கள் தெரிவுசெய்யப்பட்டு ஒரு வருடகாலமாக மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட்ட 140 பேருக்கு அடுத்த ஆண்டு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
எமது செயற்பாடுகள் இந்து பௌத்த ஒற்றுமையை வலுப்படுத்தும் முகமாகவும் மாணவர்களின் மொழி அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் எமது செயற்பாடுகள் இடம்பெறுகிறது.
வட மாகாணத்தில் சிங்கள மொழி கற்கை நெறி பயிற்றப்பட்ட ஆசிரியர்களை உள்ளடக்கி அரச பாடசாலைகளில் எதிர்வரும் 2022ஆம் ஆண்டுகான வகுப்புக்கள் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் இடம் பெறவுள்ளது.
மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளும் நோக்கில் தொழில் நீதியான மொழியறிவை ஏற்படுத்துவதற்காக கொரிய மற்றும் சீன மொழிகளை கற்பிக்கும் செயற் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆகவே இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் நடாத்தப்படுகின்றன அனைத்து பாட நெறிகளும் இலவசமாக போதிக்கப்படும் நிலையில் அனைத்து மாணவர்களும் இணைந்து பயன்பெற வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.