SuperTopAds

தியனன்மென் சதுக்க படுகொலை நினைவுத் தூபி ஹொங்கொங் பல்கலையிலிருந்து அகற்றம்!! -இரவிரவாக சீனா அரசு செய்த அட்டூழியம்-

ஆசிரியர் - Editor II
தியனன்மென் சதுக்க படுகொலை நினைவுத் தூபி ஹொங்கொங் பல்கலையிலிருந்து அகற்றம்!! -இரவிரவாக சீனா அரசு செய்த அட்டூழியம்-

சீனா நாட்டின் தியனன்மென் சதுக்க படுகொலைகளை நினைவுகூரும் வகையில் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபி பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று இரவிரவாக அகற்றப்பட்டது.

அந்நாட்டு அரசின் கோர முகத்தை நினைவூட்டும் தியனன்மென் சதுக்க படுகொலை 1989 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் திகதி இடம்பெற்றது.

குறித்த ஆண்டில் ஜனநாயகத்தை வலியுறுத்தி அந்நாட்டில் பெரும் போராட்டம் நடந்தது. 1989 ஏப்ரல் 15 இல் ஆரம்பித்த போராட்டம் வலுப்பெற்றது. அதே ஆண்டு ஜூன் 4 இல் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் பெருமளவில் கூடினர்.

ஆனால் சீன அரசு இந்த போராட்டத்தை இராணுவ பலத்தைக் கொண்டு ஒடுக்கியது. யுத்த டாங்கிகளால் நசுக்கப்பட்டும் சுடப்பட்டும் அப்பாவி மாணவர்கள் நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர்.

1989 ஜூன் 4 அன்று அப்போதைய சீன கம்யூனிச அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கையில் எத்தனை பேர் இறந்தார்கள்? என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை. இதில் 200 பேர் கொல்லப்பட்டதாகவும், 7 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் சீன அரசு கூறியது.

ஆனால், சீனாவில் இருந்த ஒரு இங்கிலாந்து ஊடகவியலாளர் குறித்த சம்பவத்தில்  இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறினார்.

இந்த தியனன்மென் சதுக்க படுகொலையை நினைவுகூரும் வகையில் ஹொங்கொங் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்ட சடலங்களை நினைவுறுத்தும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்தது.

அவமானத்தின் சின்னம் என்று அழைக்கப்படும் இந்த நினைவுச் சிலையை அகற்ற சீன சார்பு ஹொங்கொங் பல்கலைக்கழக நிர்வாகம் முதலில் கடந்த ஒக்டோபர் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று இரவோடு இரவாக இந்தச் சிலை சீன அதிகாரிகளால் அகற்றப்பட்டது. சீன சார்பு பல்கலைக்கழக அதிகாரிகள் சிலை அமைந்திருந்த இடத்தை சுற்றி மறைப்புகளை ஏற்படுத்தினர். பின்னர் 26 அடி கொண்ட செப்புச் சிலை அங்கிருந்து இரவோடு இரவாக அகற்றப்பட்டது.

சிலை அகற்றப்படும் வேளை பல்கலைக்கழக வளாகத்துக்குள் யாரும் நுழைய முடியாதவாறு சீன படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. செய்தியாளர்களும் அந்த இடத்தை நெருங்கவோ, அது குறித்த பதிவுகளைச் செய்யவோ முடியாதவாறு தடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் 24 ஆண்டுகளாக இருந்த இந்தச் சிலை பல்கலைக்கழகத்தில் பிரத்தியே இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.