பிலிப்பைன்ஸை தாக்கிய ‘ராய்’ புயலில்!! -பலியானோர் தொகை 375 ஆக உயர்வு-
பிலிப்பைன்ஸ் நாட்டை கடந்த வியாழக்கிழமை தாக்கிய மிகவும் பலம் வாய்ந்த ‘ராய்’புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 375 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புயலில் சிக்கிய 56 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை ஆண்டுகளில் அந்நாட்டை தாக்கிய மிகவும் பலம்வாய்ந்த புயலாக இது அமைந்திருந்தது. 2 நாட்களாக வீசிய புயல் காற்றில் சிக்கிய நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன.
வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் பல காற்றில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கின.
புயலைத் தொடர்ந்து கடும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மூழ்கின. நூற்றுக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
வாகன போக்குவரத்து முடங்கியது. புயல் காரணமாக 200ற்க்கும் மேற்பட்ட நகரங்களில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு சேவையும் முடங்கி உள்ளது.
புயல் மற்றும் வெள்ளத்தால் இலட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் நாசமாயின. இந்த புயல் காரணமாக சுமார் 8 இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் சொந்த வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்த நிலையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.