கிளிநொச்சி- ரொட்றிக்கோ மைதான புனரமைப்பு மந்தகதியில்..

கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்ப்பகுதியில் அமைக்கப்படும் சர்வதேச விளையாட்டு மைதானம் ஓர் ஆண்டில் கட்டி முடிப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று 5 ஆண்டிலும் ஆமை வேகத்திலேயே நகர்வதாக விளையாட்டுக் கழகங்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மகிந்த அரசின் காலத்தில் இரண்டு ஆண்டுகாலத் திட்டம் என 2014ம் ஆண்டில் இதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறு மிகப்பெருமெடுப்பில் ஆரம்பமான குறித்த திட்ட ஆரம்பத்தின்போது 2016ம் ஆண்டு தேசிய விளையாட்டுப்போட்டிகள் கிளிநொச்சியில் இந்த மைதானத்தில் இடம்பெறும் என்றே வெற்று வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டன.
இதனால் விளையாட்டு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். இதன் பிற்பாடு கட்டுமானப் பணிகளில் தாமதமடைந்த்து அதற்கான காரணத்தைகோரியபோது எந்த தகவலையும் அரச அதிகாரிகள்தெரிவிக்கவில்லை. இருப்பினும் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கிய பெரும் தொகையான நிதி அநுராதபுரம் மாவட்டத்திற்குத் திருப்பியிருந்தமை தெரியவந்த்து.
குறித்த விடயம் தொடர்பில் பலரும் குரல் எழுப்பியிருந்தனர். இந்த நிலையில் 2017ல் நிறைவுறுத்தப்படும் எனவும் அதன் பிற்பாடு 2018ல் நிறைவுறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டபோதும் இன்றுவரையில் எந்த முன்னேற்றமும் கண்டுகொள்ளவில்லை.
இதனால் குறித்த பணியானது 2018ம் ஆண்டிலாவது முடிவுறுத்தப்படுமா ? என்ற ஐயமே எழுகின்றது. எனவே இது தொடர்பில் மாவட்டச் செயலகம் ஓர் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை மேற்கொண்டு மாவட்ட இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த முன்வர வேண்டும். எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறிப்பாக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கட்டுவதற்காக திட்டமிட்ட விளையாட்டு மைதானத்மிற்கான நிதி 2014ம் ஆண்டே விடுவிக்கப்பட்டபோதும் இதே காலத்தில் அநுராதபுரம் மாவட்டத்திலும் ஓர் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது.
இரு மைதானமும் ஒரே அமைச்சின் ஊடாக ஒரே ஒப்பந்த காரர்மூலம் அமைக்கப்பட்ட நிலையில் அநுராதபுரம் மைதான அமைப்பு பணிக்கு நிதிபோதாமை ஏற்பட்ட நிலையில் கிளிநொச்சி மைதானத்தின் நிதி எந்தவிதமான அனுமதியும் இன்றி திருப்பப்பட்டது. இதன் பின்னர் கிளிநொச்சி நிதிக்கு என்ன நடந்த்து எனக் கண்டறிவதற்கே ஓராண்டு சென்றது. தற்போது படையினரின் மூலம் ஆமை வேகத்தில் பணி அமைப்பு இடம்பெறுகின்றது.
என சுட்டிக் காட்டுகின்றனர். இவ்வாறு விளையாட்டுக் கழகங்களால. சுட்டிக் காட்டப்படுவது தொடர்பில் மாவட்டச் செயலாளர் சு.அருமைநாயகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது ,
மேற்படி விளையாட்டு மைதானப் புனரமைப்பு பணிகள் பூர்த்தியடையும் கட்டத்தை எட்டியுள்ளது. இதேநேரம் ஒதுக்கீட்டு நிதியும் போதாத காரணத்தினால் மூலப்பொருட் கொள்வனவோடு மனித வலுவிற்காக படையினர் பயன்படுத்தப்பட்டனர் எனப் பதிலளித்தார்.