யாழ்.பல்கலைகழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி..தடைகள் நீங்கியது

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைகழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி..தடைகள் நீங்கியது

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு ஏற்பட்ட தடங்கல் மாணவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டுடன் நீங்கியது.

வன்னி இறுதிப் போரின் போது உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உறவுகள் உள்பட முள்ளிவாயக்கால் பேரவலத்தை நினைவு கூருவதற்கு நினைவாலயம் அமைக்க பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர்.

பல்கலைக்கழக வளாக முன்றலில் அதனை அமைக்கும் பணிகளை அவர்கள் கடந்த புதன்கிழமை (18) ஆரம்பித்திருந்தனர். எனினும் அந்த இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் பணிப்பால் தடங்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தில் உயர்மட்டத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த வியாழக்கிழமை பிற்பகல் பேச்சுக்கள் இடம்பெற்றன.

போரில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில். முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க நிர்வாகம் தடையில்லை   எனவும் அதனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகாமையில் அமைக்குமாறும் உயர்மட்டத்தினரால் மாணவர் ஒன்றியத்திடம் கோரப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்த மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அதற்கு இணக்கம் தெரிவித்தனர். 

இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் கடந்த வியாழக்கிழமை (19) தொடக்கம் அமைக்கப்பட்டு வருகிறது.

யாழ்.பல்கலைக்கழக பொங்குதமிழ் எழுச்சி நினைவகம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது. 

வரும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் மாணவர்களால் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு