தேள் கடிக்கு இலக்காகி மூவர் பலி: 500 வைத்தியசாலையில்!! -எகிப்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் விபரீதம்-
எகிப்தில் கடும் புயல் மற்றும் கடும் மழை, வெள்ளம் உள்ளிட்ட காரணிகளால் வீடுகள், மற்றும் வீதிகளுக்கு வந்த தேள்கள் கொட்டியதில் மூவர் உயிரிழந்ததுடன், 500 பேர் வரையானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நைல் நதிக்கு அருகிலுள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆலங்கட்டி மற்றும் புயல் தீவிரமாக இருந்தது. பலத்த மழை - வெள்ளத்தை தொடர்ந்து பெருமளவான தேள்கள் அவற்றின் இருப்பிடங்களில் இருந்து வெளியேறி மக்கள் குடியிருப்புகள் மற்றும் வீதிகளுக்கு வந்துள்ளன. அத்துடன், பாம்புகளும் வீதிகளுக்கு வந்துள்ளன.
இந்நிலையில் மலைகள் மற்றும் பாலைவனங்களுக்கு அருகிலுள்ள கிராமங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு விஷ முறிவு மருந்துகள் கூடுதலாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக எகிப்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.