பாடசாலையில் வாய்த்தர்க்கம், 15 ரவுடிகள் நிறைபோதையில் மாணவர்கள் மீது தாக்குதல், 4 மாணவர்கள் வைத்தியசாலையில்!
பாடசாலையில் மாணவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்ற நிலையில் நிறைபோதையில் 15 ரவுடிகளை பயன்படுத்தி 4 மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, மன்னார் பொிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றும் மாணவர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றிருக்கின்றது.
அதனை பாடசாலை அதிபர் சுமுகமாக தீர்த்துவைத்த நிலையில் பாடசாலை முடிந்து தனியார் வகுப்புக்கு குறித்த மாணவர்கள் சென்று கொண்டிருந்தபோது வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள்,
அவர்களின் பெற்றோர் மற்றும் 12 பேர் கொண்ட ரவுடி கும்பல் மாணவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் மாணவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தொிவிக்கப்பட்டிருக்கின்றது.
சம்பவத்தில் காயமடைந்த மாணவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு வீடுகளில் சேர்த்துள்ளதுடன் பின்னர் 4 மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதேபோல் அப்பகுதி மக்கள் மாணவர்களை காப்பாற்ற முயன்ற நிலையில் அவர்களுடைய வீடுகளுக்குள்ளும் புகுந்து தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
மேலும் பாடசாலையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தை அடிப்படையாக கொண்டே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதால், பாடசாலை அதிபர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டார்.
அதிபர் ரவுடிகளுடன் சமரசம் செய்ய முயற்சித்த நிலையில் அதிபர் முன்னிலையிலும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக மடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், முருங்கன் வைத்தியசாலையில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் சம்பவத்துடன் தொடர்புடைய ரவுடிகள் நேற்று பிற்பகல் வரையில் கைது செய்யப்படவில்லை.