மன்னார் மாவட்டத்தில் ஒரு இந்து சமயத்தவரை மாவட்ட செயலராக நியமிக்க சுமந்திரனால் முடியுமா? ஞானசார தேரர் சவால்..
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் மன்னார் மாவட்டத்தில் இந்து சமயம் சார்ந்த ஒருவரை மாவட்டச் செயலராக நியமிக்க முடியுமா? என கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஒரு நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணி தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
குறித்த செவ்வியில் பெரும்பான்மை மக்களின் சட்டத்தை சிறுபான்மை மக்கள் மீது திணிக்கும் நோக்கில் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எழுப்பபட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஞானசார தேரர் மேற்படி பதிலை வழங்கினார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், அவ்வாறன குற்றச்சாட்டை அரசியல்வாதிகள் மாத்திரம் கூறிக் கொள்கிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ்மக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள்.
கொவிட் தாக்கத்தில் இருந்து நாடு மீள வேண்டும் என்பதற்காக அண்மையில் வடக்கில் உள்ள பழமையான இந்து கோயிலுக்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டோம். அப்போது அங்கு வந்த தமிழ் இளைஞர்கள்.
இப்பிரதேசத்தில் உள்ள இளைஞர்கள் போதை பொருள் பழக்கத்திற் முழுமையாக அடிமையாகியுள்ளார்கள். அனைவரது எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்க புனர்வாழ்வு நிலையத்தை
உருவாக்குமாறு தமிழ் இளைஞர்கள் கோரிக்கை விடுத்தார்கள். பிரபாகரன் காலத்தில் இவ்வாறான நிலை காணப்படவில்லை, அரசியல்வாதிகள் இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதில்லை. எனவும் குறிப்பிட்டார்கள்.
இவை தொடர்பில் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி என கூறும் கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அறியவில்லை.பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் மன்னார் மாவட்டத்தில் இந்து ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்க முடியுமா என்ற சவாலை முன்வைக்கிறேன்.
அந்த அளவிற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மத காரணிகள் பல பிளவுகளை ஏற்படுத்தியுள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கொழும்பில் சிங்களவர்களுடன் நட்புறவுடன் பழகிக் கொண்டு வடக்கில் உள்ள மக்களை சிங்களவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு அரசியல் செய்கிறார்கள்.
வடக்கில் பௌத்தவர்களுக்கு உரிமை கிடையாது. என்பது எந்தளவிற்கு நியாயமாகும். நாட்டில் இன முரண்பாட்டை ஏற்படுத்த பதிவு செய்யப்பட்ட 500 கிருஸ்தவ அமைப்புக்கள் தற்போது பல்வேறு கோணங்களில் செயற்படுகின்றன.
காலம் காலமாக புரையோடியுள்ள பிரச்சினைகளுக்கு அரச தலைவர்கள் தீர்வு காண முயற்சித்தாலும் அரச அதிகாரிகள் அதற்கு இடமளிப்பதில்லை. அவர்கள் அரசியல்வாதிகளின் நோக்கத்திற்கமைய செயற்படுகிறார்கள் என்றார்.