ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்து நம்பிக்கையளிக்கிறது...
இரண்டாவது வருடகால அவகாசப் பகுதிக்குள் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை. மனித உரிமைகள் பேரவையை விட்டுவிட்டு மாற்றுவழிவகைகள் பற்றிச் சிந்திக்கவேண்டும் என்று ஐ.நா அனித உரிமைகள் ஆணையர் குறிப்பிட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,
எதிர்வரும் 2019 மார்ச் மாத்துக்கள் பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்களை முற்றுமுழுதாக அணிதிரட்டி மாற்றுவழியான ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்று அதனூடான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ அல்லது இலங்கை தொடர்பான குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றினை உருவாக்குவதற்கோ அழுத்தம் கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று (20.04.2018) ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர்,
கடந்த வருடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரிடம் ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் கேள்வி தொடுக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
அதன்போது நான் அவரிடம் இலங்கை அரசாங்கத்தில் முக்கியஸ்தர்களான பிரதரரும், ஜனாதிபதியும் ஏன் சமாதான தூதுவர் எனக் கூறப்படுகின்ற சந்திரிக்கா கூட படையினரை நீதிமன்றின் முன் நிறுத்தப்போவதில்லை என்றும்,
கலப்புப் பொறிமுறையினைக் கூட அமுல்ப்படுத்தப்போவதில்லை எனவும் பகிரங்கமாகக் கூறிவரும் நிலையில் நீங்கள் வழங்குகின்ற கால அவகாசத்தில் இலங்கை அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கையினை மேற்கொள்ளும் என நம்புகின்றீர்களா எனக் கேட்டேன். தனக்கு நம்பிக்கை உள்ளது என அவர் கூறியிருந்தார்.
ஆனால் இன்று அவரே இரண்டாவது வருடகால அவகாசப் பகுதிக்குள் இலங்கை பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை. மனித உரிமைகள் பேரவையை விட்டுவிட்டு மாற்றுவழிவகைகள் பற்றிச் சிந்திக்கவேண்டும் என்று கூறியிருக்கின்றார்.
மனித உரிமைகள் பேரவையை விட்டுவிட்டு உறுப்புநாடுகள் மாற்றுவழிவகைகள் பற்றிச் சிந்திக்கவேண்டும் என்றும் அவர் மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றார். அவ்வகையில் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாவது வருட காலப்பகுதியில் முப்பது ஒன்று(30/1) தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் என்று நாங்கள் எந்தவிடத்திலும் நம்பிக்கை வைத்திருக்க முடியாது.
இந்த உண்மையை நாங்கள் 2012 ஆம் ஆண்டிலிருந்து கூறிவருகின்றோம். மனித உரிமைகள் பேரவையில் உள்ள மிகப்பெரிய பலவீனம் என்னவெனில் ஒரு நாடு நிறைவேற்றவேண்டும் என தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டாலும் அந்த நாடு குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாதபட்சத்தில் மனித உரிமைகள் பேரவையினால் எதையும் சாதிக்கமுடியாது என்பதுதான்.
ஒரு நாட்டின் விருப்பத்தை மீறி அந்த நாட்டினை குறித்த தீர்மானம் ஒன்றினை நடைமுறைப்படுத்தவைப்பாதற்கு மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரமில்லை. அந்த அதிகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மட்டமே உள்ளது.
குறித்த விடயத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்று அதனூடான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ அல்லது இலங்கை தொடர்பான குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றினை உருவாக்குவதன் ஊடாக மட்டுமே இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும்.
இந்த உண்மையை நாங்கள் 2012 இல் இருந்து கூறிவருகின்றோம். கடந்த ஐந்து வருடங்களாக எமது மக்களை ஏமாற்றி எங்களுடைய தலைவர்கள் எனக் கூறுகின்ற கூட்டமைப்பினர் காலத்தை வீணடித்துள்ளனர். ஆட்சிமாற்றத்தின் பின் இந்த அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக எமது மக்களுக்குப் பொய்களைக் கூறி நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கி இரண்டு வருடத்தை வீணக்கியுள்ளனர்.
அந்தவகையில் இனியாவது எமது மக்கள் விளங்கிக்கொண்டு ஐநாவில் பேரம்பேசக்கூடியவகையில் எமது கோரிக்கைகள் பலமாகவும் உறுதியாகவும் இருக்கவேண்டும்.
குறித்த விடயத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு சென்று அதனூடான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ அல்லது இலங்கை தொடர்பான குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றினை உருவாக்குவதன் ஊடாக மட்டுமே இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற விடையத்தை நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சென்று இந்த ஒருவருட காலப்பகுதியில் இதுவே பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரதும் கோரிக்கை என்பதை ஐ.நாவிற்கு உணர்த்த வேண்டும் என்றார்.