யாழ்.வட்டுக்கோட்டையில் வன்முறைகளை கட்டுப்படுத்துங்கள்..! மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வட்டுக்கோட்டையில் வன்முறைகளை கட்டுப்படுத்துங்கள்..! மக்கள் போராட்டம்..

யாழ்.வட்டுக்கோட்டையில் வன்செயல்களை கட்டுப்படுத்தக்கோரி பொதுமக்கள் இணைந்து கையெழுத்து போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றனர். 

வட்டுக்கோட்டை - முதலியார் கோவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில், அப்பகுதியைச் சேர்ந்த இருவர் 

தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் ஒருவரது அவயம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தாக்குதல் நடத்தியதாக ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு, 

மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஆகவே தாக்குதல் நடாத்திய மிகுதிப்பேரையும் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் 

துணைவி மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது பின்வரும் மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வட்டுக்கோட்டையில் இடம்பெறும் சாதிய வன்முறைகளுக்கு எதிராக அரசு சட்டரீதியான நடைமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும்.

வட்டுக்கோட்டை முதலியார் கோவில் பகுதியில் முதியவர்களுக்கு எதிராக வாள்வெட்டில் ஈடுபட்ட மிகுதி நபர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் சாதிய வன்முறைகளை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு அடக்குவதன் ஊடாக மனித சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

போராட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கையில்,குறித்த கும்பல் மூளாய், பொன்னாலை, அராலி, முதலியார் கோவில், துணைவி 

போன்ற அனைத்து பகுதிகளிலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள். இருப்பினும் அவர்களுக்கு எதிரான முறைப்படியான சட்ட நடவடிக்கைக்கள் எவையும் இதுவரை சரியாக மேற்கொள்ளப்படவில்லை.

அரசியல்வாதிகள் தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்குகளை சேகரிப்பதற்காக வருவார்கள், தேர்தல் முடிந்ததும் சென்றுவிடுவார்கள். 

இப்படியான பிரச்சினைகள் ஏற்படும்போது வந்து எதுவும் எமக்கான நியாயத்திற்காக குரல் கொடுக்க மாட்டார்கள் என்றனர்.

Radio